உக்ரைன்: நியாயங்களும் நிலைப்பாடுகளும்

 


By கார்த்திக் வேலு
சோவியத் ஒன்றியம், செஞ்சீனம் ஆகிய கொம்யூனிச ஆட்சி அதிகார மையங்களிலிருந்து வந்த  லெனினிச/ஸ்டாலினிச/மாவோயிச பிரச்சார வரலாற்றுப் புத்தகங்களை மதநூல்களாக படித்து விழுங்கிவிட்டு ரூசியாவின் உக்ரேனியப் படையெடுப்புக்கு தமிழ்  இடதுசாரிகள் ஆதரவு மதப்பிரச்சாரக் கட்டுரைகள் எழுதுகிற இக்கணத்தில் அருஞ்சொல் என்கிற சுயாதீனமான தமிழ் பத்திரிகை இப்போரின் உண்மையான  வரலாற்றை சமூக விஞ்ஞானமாக சொல்கிறது. இக்கட்டுரையை படித்தவர்கள்(குறிப்பாக வெளிநாட்டு தமிழர்கள்) உங்களால் முடிந்தால் இந்த அருஞ்சொல் பத்திரிகைக்கு சந்தா செலுத்துங்கள். உங்கள் உதவியால் சந்தா செலுத்த முடியாத தமிழக, ஈழ, மலேசிய மாணவர்கள் முதலியோருக்கும் அருஞ்சொல் சென்று சேர வாய்ப்பாகும். 

ந்திய வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பேரரசுகள் வளர்ந்து தேய்ந்த சித்திரம் நமக்குப் பள்ளிக்கூட வரைபடப் பயிற்சியாக நம் மனதில் பதிந்திருக்கும். இன்றைய தமிழகம் என்பது வரலாற்றின் சுவடுகளில் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்ட ஒன்றே. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு எல்லைகளைக் கொண்டிருந்தது. ஆனால்,  ஒரு நவீன ஜனநாயக நாடாக நாம் உருவாகிய பின்னர் பல்வேறு தனித்தன்மைகளும் மொழி தேசியங்களும் அடங்கிய மாநிலங்களாக நம்மை அடையாளப்படுத்திக்கொண்டோம். 

உக்ரைனிய அடையாளம் 

ஐரோப்பாவும் இப்படித்தான். உக்ரைன் வரலாற்றில் தனக்கென ஒரு தனி அடையாளம் கொண்டிருந்தது. அது காலப்போக்கில் பல்வேறு பேரரசுகளின்  ஆளுகைக்குள் இருந்தும் பிரிந்தும் உருவானது. நாம் எப்படி திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்கிறோம். அதேபோல, ரஷ்யன், உக்ரைனியன், போலிஷ், பல்கேரியன் எல்லாம் ‘ஸ்லாவிக்’ எனப்படும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள். அதேபோல, வெவ்வேறு எழுத்து வடிவங்களைக் கொண்டவை. ஓர் உதாரணத்துக்காகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழை ரஷ்ய மொழிக்கு ஒப்புமை கொண்டால் உக்ரைனியனை மலையாளத்துக்கு ஒப்புமை கூறலாம். நெருங்கிய தொடர்பு இருந்தாலும், இரண்டும் அதனதன் அளவில் தனித்துவமானவை. அதேசமயம், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பவர்கள் ஐரோப்பாவில் அதிகம்.  அந்த வகையில், உக்ரைனில் ரஷ்ய இனக் குழுவைச் சார்ந்தோர் 17% பேர்தான் என்றாலும், ரஷ்ய மொழி அறிந்தோர் 30% வரை இருப்பார்கள். 

18ஆம் நூற்றாண்டின் மத்தியில் சமகால உக்ரைனின் பெரும் பகுதி ரஷ்யப் பேரரசின் கீழும், போலிஷ் பேரரசின் கீழும், பின்னர் ஹாப்ஸ்பர்க் ஆஸ்திரியப் பேரரசின் கீழும் இருந்தது. உக்ரைன் மொழியும் உக்ரைன் தேசியமும் ஒரு தெளிவான வடிவத்தை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடைந்தன. ஆனாலும், ரஷ்ய அதிகாரத்தின் கீழ்தான் உக்ரைன் மக்கள் வாழ்ந்துவந்தனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உக்ரைன் மொழியில் பாடம் கற்பிக்கப்படுவதை ரஷ்ய ஆட்சியாளர்கள் தடைசெய்யும் அளவுக்கு உக்ரைனிய அடையாளம் தனக்கான ஒரு தனி இருப்பை உருவாக்கிக்கொண்டது.

ரஷ்ய புரட்சிக்குப் பின் உக்ரைன் 1918இல் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. ஆனால், இது நடந்த ஓரிரு ஆண்டுகளிலேயே கம்யூனிஸ்ட்டுகளின் சோவியத் போல்ஷ்விக் அரசு உக்ரைனைத் தன்வசப்படுத்தியது. ஸ்டாலின் கொண்டு வந்த கூட்டுப்பண்ணை முறை 1930-களில் பெரும் பஞ்சத்தையும் பட்டினியையும் உருவாக்கியபோது அது உக்ரைனை மிகக் கடுமையாகப் பாதித்தது. 30 லட்சத்துக்கும் மேலான உக்ரைனியர்கள் பட்டினியால் உயிரிழந்தார்கள். இந்த நிகழ்வைக் குறித்துப் பேசுவதேகூட பல காலம் கம்யூனிஸ்ட்டுகளால் தடைசெய்யப்பட்டிருந்தது. 

இத்தகு அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நடந்த ‘அரசியல் களையெடுப்பு நடவடிக்கையில் உக்ரைனின்  அறிவார்ந்த தரப்பின் முக்கால்வாசி அழிக்கப்பட்டது. இவையெல்லாம் உக்ரேனியர்களால் ரஷ்ய ஆதிக்க தாக்குதலாகவே பார்க்கப்பட்டது. இதன் பிறகான காலகட்டத்தில் உக்ரைன் கலாச்சார அடையாளம் குறித்த அனைத்து விஷயங்களும் முடக்கப்பட்டது மொழி உட்பட. 


இந்தக் கொந்தளிப்புக்கு சோவியத் ஒன்றியத்தின் உடைவானது ஒரு வடிகாலாக அமைந்தது. 

சுதந்திர உக்ரைன் 

சோவியத் ஒன்றியம் கலைந்ததை ஒட்டி 1991இல் சுதந்திரம் பெற்ற உக்ரைன் சில தடுமாற்றங்களுடன் தனது சுதந்திரத்துக்கு பின்னான பயணத்தை ஆரம்பித்தது. இந்தப் பிரிவானது மக்களின் கருத்தெடுப்பின் வழியாகவே – பெரும் தொகையினரின் ஆதரவின்பேரிலேயே நடந்தது. ஆயினும், ரஷ்ய ஆதரவு – ரஷ்ய எதிர்ப்பு எனும் இரு சக்திகள் உக்ரேனிய அரசியலிலும், சமூகத்திலும் செயல்பட்டுவந்தன. அதேபோல, சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு ரஷ்யா தன்னிடமிருந்து பிரிந்த நாடுகளுடன் ஓர் அணுகுமுறையை ராஜதந்திரரீதியாகக் கையாண்டுவந்தது. அது என்னவென்றால், தனி நாடுகளாக அவை செயல்பட்டாலும் ரஷ்யாவுடன் அணுக்க உறவைப் பராமரிப்பது என்பதே ஆகும்; இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால், அமெரிக்க அல்லது ஐரோப்பிய நட்பு வட்டத்துக்குள் அவை சென்றுவிடக் கூடாது என்ற அணுகுமுறை. 

தன்னுடைய தேசப் பாதுகாப்புக்கு இது முக்கியம் என்று ரஷ்யா கருதியது. இதற்கேற்ப அந்த நாடுகளின் தனக்கு ஆதரவான ஒரு அரசியல் வட்டத்தையும் அது பராமரித்துவந்தது. இதன் தாக்கங்கள் உக்ரைனில் அதிகம். இதன் வெளிப்படையான விளைவு 2004இல் வெளிப்பட்டது. ரஷ்ய ஆதரவாளர் விக்டர் யானகோவிச் உக்ரைன் அதிபராக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், வாக்கெடுப்பில் பல முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் தேர்தல் முடிவை ரத்துசெய்தது. மீண்டும் நடந்த தேர்தலில் விக்டர் யுஷ்சென்கோ வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் நடக்க ஓரிரு மாதங்கள் இருக்கும்போதுதான் யுஷ்சென்கோ உணவில் டையாக்சின் (Dioxin) என்னும் நச்சுப் பொருள் கலக்கப்பட்டு நோயுற்றார் – ஒரே நாளில் அவர் முகம் அம்மை விழுந்ததுபோல உருமாறியது. 

இந்தத் தருணத்தில் நாம் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். 2000இல் ரஷ்ய அதிபராகப் புடின் பதவி ஏற்றார். இன்றைய  உலகின் யதேச்சதிகாரிகளில் ஒருவரான அவர், தேசியவாத அரசியலைத் தன்னுடைய அரசியலின் மையமாகக் கொண்டவர். ஆகவே, உக்ரைன் விஷயத்தில் ரஷ்யாவின் அரசியல் தலையீடுகள் புடின் ஆட்சியின் கீழ் உச்சம் நோக்கிச் சென்றன. 

உக்ரைனை ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிக் கொண்டுசெல்வதாக முன்வைத்த வாக்குறுதிகளின் காரணமாகவே யுஷ்சென்கோ வென்றார். இதற்கான விழைவு உக்ரைனில் இருந்தது. விளைவாக ரஷ்ய எதிர்ப்பு யுஷ்சென்கோவுக்கு இருந்தது. அமெரிக்க - ஐரோப்பிய அமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் 2008இல் தனது விருப்பத்தை தெரிவிக்கிறது. நேட்டோவில் புதிதாக ஒரு நாடு சேர வேண்டும் என்றால், அதற்கு அதன் அத்தனை உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். உக்ரைனைச் சேர்க்கும்  முடிவுக்கு பிரான்ஸும், ஜெர்மனியும் ஆதரவாக இல்லை. எதிர்காலத்தில் மீண்டும் பரிசீலிக்கலாம் என்ற போக்கில் இது அமைந்தது. மேலும், நேட்டோவில் சேர உக்ரைனிய மக்களிடமேகூட பெரிய ஆர்வம் அன்று இருந்திருக்கவில்லை. 

ரஷ்ய ஆதரவாளர் விக்டர் யானகோவிச் 2010 தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுகிறார். நேட்டோவில் சேரும் திட்டம் கிடப்பில் போடப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைய வேண்டும் எனும் குரல் இதற்குப் பின் வலுவடைகிறது. விக்டர் யானகோவிச் இதை விரும்பவில்லை. அவர் முட்டுக்கட்டை போடுகிறார். நேட்டோ என்பது ஒரு ராணுவக் கூட்டமைப்பு; ஆனால்,  ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பு. பின்னது, உக்ரைனிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒன்றாகக்கூட மாறலாம்; ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் ஆகிவிட்டால் தங்கு தடையினறி ஐரோப்பா எங்கும் உக்ரைனியர்கள் வேலை நிமித்தமோ, கல்வி  நிமித்தமோ சென்று வரலாம் எனும் எண்ணம் உக்ரைனியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது. இந்த எதிர்பார்ப்பு தடைபட்டது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. 2013 நவம்பரில் உக்ரைன் மக்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாவது ரத்துசெய்யப்பட்டது. “ஐரோப்பாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உக்ரைனுக்கு நல்லதல்ல; நாம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம்!” என்றார் விக்டர் யானகோவிச். 

இது உக்ரைனிய மக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. போராட்டம் வெடித்தது. முதலில் சில ஆயிரம் பேர் கொண்டதாக ஆரம்பித்த இப்போராட்டம், சில நாட்களிலேயே ஒரு லட்சத்தைத் தாண்டியது.  இடதுசாரி, வலதுசாரி, உக்ரைன் தேசியவாதி என்று பல தரப்பினரும் பங்கேற்ற போராட்டமாக இது வளர்ந்ததால், ஒரு மாதக் காலத்தில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டது . உக்ரைன் அரசு இதை ஒடுக்கும் விதமாகக் கடுமையாகவே நடந்துகொண்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

பிறகு 2014 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றம் கூடியபோது அதிபர் விக்டர் யானகோவிச் பதவி இழப்பது உறுதியானது. சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியிருந்தது. விக்டர் யானகோவிச் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார். இது நடந்த ஓரிரு மாதங்களிலேயே உக்ரைன் ஆளுகைக்குள் இருந்த கிரைமியாவிலும் டோன்பாஸிலும் பிரிவினை கோரி வந்தவர்கள் அந்தப் பகுதிகளை சுயாட்சிப் பகுதியாக அறிவித்துக்கொண்டார்கள்; இதன் பின்னணியில் ரஷ்யா இருந்தது.  

இந்தச் சம்பவங்களை இதுவரை நாம் கவனித்துப்பார்த்தால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். அது, ரஷ்யாவிடமிருந்து மெல்ல உக்ரைன் விலகிக்கொண்டேவருவதும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாகத் தலையிட்டுவருவதும் ஆகும். கிரைமியா பகுதி ஒருகாலத்தில் ரஷ்ய அரசால் உக்ரைனோடு இணைக்கப்பட்ட பகுதி என்ற பின்னணியோடு பார்த்தால், இதன் உள் அரசியலை நன்றாக விளங்கிக்கொள்ளலாம். அதேபோல், ஐரோப்பாவுடன் ஒன்றிணையும் எண்ணமும் உக்ரைனியர்களிடம் ரஷ்யாவின் எதிர் நடவடிக்கைகளுக்குப் பிறகே உச்சம் நோக்கிச் சென்றது.

கிரைமியா விவகாரத்துக்குப் பின்னர், இந்தப் பிராந்தியத்தில் தலையீட்டுக்குக் காத்திருந்த அமெரிக்க – ஐரோப்பிய வல்லரசுகளின் முனைப்பு அதிகம் ஆனது. உக்ரைனுக்கான உதவிகளை அதிகரித்ததுடன் நேட்டோவை நோக்கியும், ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கியும் உக்ரைனை உள்ளிழுக்கும் முனைப்பு கூடுதலானது.

ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யானகோவிச் தப்பி ஓடிய பிறகு நடந்த தேர்தலில், பொர்ஷென்கோ அதிபரானார்; இவர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். இது மேலும் புடினைச் சீண்டுவதாக அமைந்தது. இரு தரப்பு உறவுகளும் கடும் கசப்புக்குள் சென்றுகொண்டிருந்தன. பொர்ஷென்கோவின் ஆட்சி முடிந்து 2019இல் நடந்த தேர்தலில், தற்போதையை அதிபரான ஜெலென்ஸ்கி பதவிக்கு வந்தார். அமெரிக்காவிலும் 2020இல் அதிகாரம் கை மாறி, பைடன் ஆட்சிக்கு வந்தார். ஜெலென்ஸ்கி பொறுப்பேற்றதுமே உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொள்ளும்படி தொடர்ந்து அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் கேட்டுவந்தவர். இது பதற்றத்தை மேலும் கூட்டிவந்தது. 

புடாபெஸ்ட் ஒப்பந்தம் 

இந்த விவகாரத்தில் முக்கியமான ஓர் ஒப்பந்தத்தை நாம் பேசுவது அவசியம். அது புடாபெஸ்ட் ஒப்பந்தம். 1991இல் உக்ரைன் பிரிந்தது தனி நாடாகிறது. அதே ஆண்டில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும்  இடையே ‘ஸ்டார்ட்ஸ்’ (STARTS) எனப்படும் அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. சோவியத் ஒன்றியம்  கலைந்த பின் அந்த ஆயுதக் குறைப்பு பொறுப்பு முன்னாள் ஒன்றிய நாடுகளின் மேலும் வந்து சேர்கிறது. இதன்படி 1994இல் உக்ரைன், கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்குத் திரும்ப அளித்தது.

உக்ரைனுக்கு இந்த ஆயுதங்களைத் திரும்ப ரஷ்யாவுக்கு அளிப்பதில் நிறையத் தயக்கம் இருந்தது. ஏனென்றால், அவர்களிடம் இருந்த சர்வதேச அளவிலான துருப்புச் சீட்டு அந்த ஆயுதங்கள். ஆனால், அணு ஆயுதங்களைப் பராமரிப்பது ஒரு யானைக் கூட்டத்தை வைத்துப்  பராமரிப்பதற்குச் சமம். பொருளாதாரரீதியாகத் தடுமாறிக்கொண்டிந்த உக்ரைனுக்கு இது மிகப் பெரிய பளு. மேலும், அந்த ஆயுதங்கள் உக்ரைன் கைவசம் இருந்தாலும், அவற்றைக் கையாளும் விஷயங்கள்  ரஷ்யாவின் வசமே இருந்தன. அணு ஆயுதப் பரவல் தடுப்பில் அனைத்து நாடுகளும் முனைப்பாக இருந்த காலம் அது என்பதால்,  அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா என மூன்று நாடுகளும் உக்ரைனுடன் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தன. ‘புடாபெஸ்ட் ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின்படி, ‘உக்ரைன் எல்லா அணு ஆயுதங்களையும் ரஷ்யாவுக்கு திரும்ப அளிக்க வேண்டும்; அதற்கு ஈடாக இந்த மூன்று நாடுகளுமே உக்ரைனின் இறையாண்மையை மதிக்கும்; அரசியல்ரீதியாகவோ பொருளாதாரரீதியாகவோ உக்ரைனை நிலைகுலைய வைக்கும் முயற்சிகளை முன்னெடுக்காது’ என்பதே அதன் சாராம்சம்.

உக்ரைனின் கிரைமியா பகுதியை 2014இல் ரஷ்யா ஆக்கிரமித்தது, நேரடியாக புடாபெஸ்ட் ஒப்பந்தத்தின் மீதான தாக்குதல். ஆனால்,  ரஷ்யா இதற்கு வில்லத்தனமான ஒரு காரணத்தைச் சொன்னது, ‘கிரைமியா தங்களைத் தாங்களே தனி நாடாக அறிவித்துக்கொண்ட பிராந்தியம். எனவே, எங்கள் ஒப்பந்தம் உக்ரைனுக்கு மட்டுமே பொருந்தும் என்று சப்பைக்கட்டு கட்டியது.

உக்ரைன் விவகாரமானது, அமெரிக்காவைப் பொறுத்த அளவில் அதன் வல்லாதிக்க விளையாட்டுக்கான களம். ஆனால், ஐரோப்பிய நாடுகளை அப்படிக் கூறிட முடியாது. ரஷ்யாவுடனான மோதல் தங்களையே அதிகம் பாதிக்கும் என்று உணர்ந்த ஐரோப்பிய நாடுகள், தங்களுக்கும் ரஷ்யாவுக்கு இடையில் இதைப் பேசி முடித்துக்கொள்ள முடியுமா என்ற முயற்சியிலும் ஈடுபட்டனர். ஆனாலும் இது எடுபடவில்லை. 

நேட்டோ 

உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ அமைப்பைக் காரணமாக  காட்டும் ஒரு வலுவான பார்வை உள்ளது. அதுபற்றியும் நாம் பார்ப்போம். இரண்டாம் உலக யுத்தத்தில் மொத்த ஐரோப்பாவுமே ரத்தக் களரி ஆகியது. கிட்டத்தட்ட இரண்டு கோடிப் பேர் உயிரிழந்தனர். சாலை வசதி, தொழிற்சாலைகள் என்று அடிப்படைக் கட்டமைப்புகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகின. போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தாலும், இந்த நாடுகள் மீண்டும் தமது சொந்தக் காலில் நிற்க வெளியே இருந்து உதவி வராமல் சாத்தியமே இல்லை என்னும் நிலை உருவாகியது . அந்தச் சமயத்தில் அமெரிக்காதான் ஐரோப்பாவுக்கு கை கொடுத்து உதவியது. ‘மார்ஷல் பிளான்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட திரட்டப்பட்ட இந்த உதவி நிதியின் மதிப்பு 13 பில்லியன் டாலர் - இன்றைய மதிப்புக்கு தோராயமாக ரூ. 10 லட்சம் கோடி. இதன் தொடர்ச்சியாகவே ‘நேட்டோ’ அமைப்பைக் காண வேண்டி இருக்கிறது.

இந்த ஐரோப்பிய மறுநிர்மாணத்தைப் பாதுகாக்கவும், உறுதிசெய்யவும் உருவாக்கப்பட்ட ராணுவக் கூட்டமைப்பான ‘நேட்டோ’ அமெரிக்காவுக்கும் பல விதங்களில் சாதகமாக அமைந்தது. ரஷ்யாவின் ஆளுகை மேற்கே பரவுவதை இது கட்டுக்குள் வைத்தது. அமெரிக்காவின் செல்வாக்கை ஐரோப்பாவில் உறுதியாக நிலைநிறுத்தியது. அமெரிக்க  தொழில்களுக்கு நம்பகமான ஒரு சந்தையை ஐரோப்பாவில் உறுதிசெய்தது. 

இதை எதிர்கொள்ளும் பொருட்டு சோவியத் ஒன்றியத்தின் தரப்பில் உருவாக்கப்பட்டதுதான் ‘வார்சா ஒப்பந்தம்’. சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளும் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. ஆனாலும்,  நேட்டோவுக்கும், வார்சாவுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. வார்சா நாடுகளில் உள்ள மக்களுக்கு  கம்யூனிஸத்தின் கீழ் இருப்பது உவக்கவில்லை. மேலும், ஹங்கேரி, போலந்து போன்ற நாடுகளில் நிகழ்ந்த கலகங்களை சோவியத் ஒன்றியம் நேரடியாகத் தலையிட்டு நசுக்கியது. இந்த வித்தியாசம் முக்கியமானது என்று நினைக்கிறேன். 

தேசங்கள் ஒருங்கிணைவதும் ஒன்று சேர்வதும், அந்த மக்கள் விரும்பினால்தான் நிற்கும்; இல்லையென்றால் எப்படியோ ஒருநாள் சரியும். 1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்தபோது வார்சா நாடுகளும் பிரிந்தன. மாறாக, இன்றும் தொடரும் ‘நேட்டோ’ அமைப்பில் ஒட்டுமொத்தமாக உள்ள 29 ‘நேட்டோ’ நாடுகளில் 60%-க்கும் மேலான மக்கள் தங்கள் நாடு ‘நேட்டோ’வில் இருப்பதை விரும்புகிறார்கள். 

பனிப்போர் காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்ட பின்னரும்கூட, நேட்டோ போன்ற ஒரு ராணுவக் கூட்டமைப்புக்கான தேவை என்ன என்ற கேள்வி உண்டு. இப்படி ஒரு ராணுவக் கூட்டமைப்பை விரிவுபடுத்திக்கொண்டேபோவது வல்லாதிக்கத்தை வளர்த்தெடுக்கும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இன்று ரஷ்யா துணிந்து உக்ரைனை நேரடியாக ஆக்கிரமிக்கும் சூழலில் அதைத் தடுத்துக் கேட்க யார் இருக்கிறார்கள்? எல்லா நாடுகளும் கைகட்டி வேடிக்கைதானே பார்க்கின்றன? ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தைக்  கொண்டுவருவதில்கூட எவ்வளவு தயக்கம்? இத்தகு சூழல்தான் ‘நேட்டோ’ போன்ற அமைப்புக்கான நியாயமாக அதன் உறுப்பு நாடுகளால் சொல்லப்படுகின்றன.

பிடனும் புடினும்

ஒரு போர் எல்லோரையும் இரண்டாகப் பிரிப்பதுபோலவே உலகத்தையும் இரண்டாகப் பிரித்திருக்கிறது. நிதர்சன அரசியல் நோக்கில் பார்த்தால், அவரவர் நலன்களும், அந்தந்த நாடுகளின் பாதுகாப்புமே நாடுகளின் நகர்வுகளுக்கான முக்கிய காரணங்களாக இருந்திருக்கின்றன. உக்ரைனின் நகர்வுகள் ரஷ்யாவைப் பாதிக்காது என்றோ, ரஷ்யாவின் பதற்றம் முற்றிலும் நியாயம் அற்றது என்றோ எவரும் சொல்லிட முடியாது. ஆனால், ஒரு கொடூரமான போரை எந்தக் காரணங்களாலும் ஜனநாயகர்கள் நியாயப்படுத்த முடியாது. மேலும், ஒரு போருக்கான இரு தரப்புகளில் ஏதோ ஒரு தரப்பே எப்போதும் போரை உந்தி முன்னோக்கிச் செல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த அளவில் அந்த இடத்தில் ரஷ்யா இருக்கிறது.

அமெரிக்கா அதன் அளவில் எவ்வளவோ அழிவுகளை உண்டாக்கிய வல்லாதிக்க சக்தி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; ஆனால், அமெரிக்கா எதிர்நிலையில் இருப்பதாலேயே ரஷ்யாவின் தவறுகளை நியாயப்படுத்திட முயற்சிப்பது அபத்தம். எப்படி இராக் போரை எதிர்ப்பது தார்மிகம் ஆனதோ, அப்படியே உக்ரைன் போரை எதிர்ப்பதும் இப்போதும் தார்மிகம் ஆகிறது. இந்தியா இந்த இடத்தில் நடுநிலை நிலைப்பாடு எடுப்பது என்பது, ரஷ்யாவுக்குத் துணைபோகும் செயல்பாடாகவே அமையும். இது நியாயமானது இல்லை.

மேலும், அமெரிக்காவின் இன்றைய ஆட்சியையும், ரஷ்யாவின் இன்றைய ஆட்சியையும் சமநிலையில் வைத்துப் பார்ப்பதும் அபத்தம். இன்றைய அமெரிக்காவின் அதிபருக்கு உச்ச அதிகாரம் உண்டு. ஆனால், இன்றைய ரஷ்ய அதிபரிடம் இருப்பதோ முற்றதிகாரம். 

ரஷ்யா என்பது புடின். புடின் என்பது ரஷ்யா. கடந்த 22 ஆண்டுகளாக ரஷ்யாவைத் தனது இரும்புப் பிடியின் கீழ் வைத்திருக்கும் புடின் அப்படி ஓர் ஆட்சியையே நிலைநிறுத்தியிருக்கிறார். உக்ரைனைச் சுற்றி ஒன்றரை லட்சம் படையினரை நிறுத்தியிருக்கும் அவர் அணு ஆயுதப் படையினரையும் தயாராக இருக்கச் சொல்லியிருப்பது யதேச்சதிகாரத்தின் உச்சம். இதுதான் முற்றதிகாரத்தின் தன்மை - நானே விதி, நானே வழி, நானே நீதி!

ரஷ்யாவில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் பார்த்துக்கொண்டதோடு, அப்படிப் பொருட்படுத்தத் தக்க ஒரே தலைவரான நவால்னேவையும் சிறையில் தள்ளியிருந்தாலும், உள்நாட்டில் புடினுக்கான ஆதரவு குறைந்துவருகிறது. அதுவும் இந்தப் போருக்கான உள்ளடக்கத்தில் ஒன்று. போர் எல்லா வேறுபாடுகளை மூடி, தேசியவாத உணர்வைத் தூக்கி நிறுத்தும். மீண்டும் தன்னுடைய செல்வாக்கு மேலோங்கும் என்பது புடின் கணக்கு. ரஷ்யா இந்தப் போரால் கடும் பொருளாதாரப் பாதிப்புகளுக்கு உள்ளாகும். மீண்டெழ மீண்டும் ஒரு தசாப்தம் ஆகும். ஆனாலும், புடின் தன்னுடைய சுயநலனுக்கு நாட்டைப் பணயம் ஆக்குகிறார்.

ராஜதந்திரரீதியாகப் பார்த்தாலும் புடின் ரஷ்யாவுக்கு நீண்ட காலப் பாதிப்பையே உண்டாக்குகிறார். எரிபொருள் சார்ந்து ரஷ்யாவுடன் அணுக்கமாகிவந்தது ஐரோப்பா.  அமெரிக்காவுக்கு இது எரிபொருள் பொருளாரத்தில் பெரும் இழப்பு என்பதோடு, ரஷ்ய - ஐரோப்பிய நெருக்கமானது அமெரிக்க  மேலாதிக்கத்தையும் குறைத்துவந்தது. ஆனால், புடினின் இந்த நடவடிக்கை மீண்டும் ஐரோப்பிய - அமெரிக்கப் பிணைப்பை நெருக்கமாக்கியிருக்கிறது. 

சர்வதேச புவியரசியலில் நாம் இன்று புதிய ஒரு காலகட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இதுவரை இரண்டு வல்லரசுகள் உலா வந்துகொண்டிருந்த அரங்கில், அமெரிக்காவுக்கு எதிர் இடத்தில் ரஷ்யாவுக்குப் பதில் சீனா நின்றது. மீண்டும் ரஷ்யாவை அந்த இடத்துக்குக் கொண்டுவரும் புடினுடைய முயற்சியாக அவருடைய கட்சியினர் இதைப் பார்க்கின்றனர். ஆனால், உக்ரைன் விவகாரத்தில் யாரை விடவும் அதிகம் லாபமடையப்போவது சீனாவாகத்தான் இருக்கும். இன்று ரஷ்ய ஆக்கிரமிப்பை உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டால், நாளை தைவானை சீனா கபளீகரம் செய்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் தார்மீகத்தை உலகம் இழந்திருக்கும். 

ஆனால், இப்போதைக்கு புடினைத் தடுத்து நிறுத்தும் சக்தி கண்ணுக்குத் தெரியவில்லை. ராணுவ அளவில் பெரும் சக்தியான ரஷ்யாவைத் தாக்குப்பிடிப்பது உக்ரைனுக்கு சாத்தியமே இல்லை. புடின் உக்ரைனுக்குள் அடி எடுத்து வைத்துவிட்டார்; கேட்பது கிடைக்காமல் அவர் திரும்ப மாட்டார். ஆக, பேச்சுவார்த்தைக்கான, பேரத்திற்கான அந்தப் புள்ளி எவ்வளவு சீக்கிரம் எட்டுகிறார்களோ அவ்வளவுக்கு நல்லது; மனிதம் அதுவரை அழிபடும். புடினுக்கு உடனடியாக வெற்றி கிடைக்கலாம். ஆனால், எப்படிப் பார்த்தாலும் நாம் சர்வதேச உறவுகளில் முப்பதாண்டுகள் பின்நோக்கி சென்ற உணர்வையே இது ஏற்படுத்துகிறது!

❤நன்றி அருஞ்சொல்

      இக்கட்டுரையாளர் கார்த்திக் வேலு


தொடர்பான கட்டுரைகள்

1. ரூசியாவின் மகத்தான இரு இருபதாம் நூற்றாண்டு பெண்கவிகள்

2. வல்லரசுகளைத் தோற்கடித்த 4 ராணுவ சாகசங்கள்

3. "மாவீரன்" பிரபாகரன் வரலாறு

Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

யார் இந்த யதார்த்தன்