கொள்ளி (சிறுகதை)

 


ஜூன் மாத தனிமை வெளியில் பிரசுரமான நட்சத்திரன் செவ்விந்தியனின் சிறுகதை

கிருபாகரன் தூங்கி தற்கொலை செய்துகொண்டது ஈழப்போரின் உச்சத்தில் இருந்த புலிகளில் பொற்காலத்தில். ஹாட்லிக்கல்லூரியில் என் வகுப்பு சக மாணவன் . அவன் உயரமானவன். எங்கள் வகுப்பில் முதலில் மீசை வளர்ந்தது அவனில்தான். பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். போர் நிலவரங்கள் காரணமாக சில மாதங்கள் பள்ளிக்கூடம் நடைபெறவில்லை. அதற்கு முதலே அவன் எங்களெல்லோரையும் விட்டு விலகிப்போய்விட்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சியால் அவன் எங்களைவிட இரு வயது கூடிய அண்ணன்மார்களுடனேயே நண்பரானான். 

எங்களில் முதலில் குரல் உடைந்ததும் அவனில்தான். அவனின் குரல் எனக்குப்பிடிக்கும். எட்டாம் வகுப்பில் பள்ளிக்கு ஒருநாள் பூதக்கண்ணாடி கொணர்ந்தான். முதுவேனில் காலத்தில்  திறந்த வகுப்பறை யன்னலுக்கு வெளியே சூரிய வெளிச்சத்தில் பூதக்கண்ணாடியால் வெளியிலிருந்த புற்தரையைக்கு தீ வைத்தான். சிறுதீயே உருவாக பள்ளியே கலவரமாகிவிட்டது. ஆதிபர் வந்து விசாரித்தும் எங்களில் ஒருவரும் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. 

பிறகு ஒன்பதாம் வகுப்பில் நம் அதிபரே அவனை ஒரு கீரோ ஆக்கினார். எங்கள் பள்ளி எல்லையில் இந்திய அமைதிப்படை ராணுவ முகாம் இருந்தது. நாங்கள் பேசிக்கொள்ளும் தூரத்தில் அவர்களின் சென்றி ஒன்றுமிருந்தது. ஒரு பிரசித்தமான பாடசாலை என்பதால் இந்திய ராணுவத்தினருக்கும் எங்களில் மதிப்பிருந்தது. அவ்வப்போது சைகை மொழியாலும் தெரிந்த ஆங்கிலத்தாலும் மாணவர்கள் சென்றியிலிருக்கும் இரண்டு ஜவான்களோடு பேசிக்கொள்வோம். புன்னகைகளைப் பரிமாறிக்கொள்வோம். 

கிருபாகரன் உயரமானவன் வசீகரமானவன் என்பதால் அவன் சென்றியிலிருந்த ஜவான்களோடு வேறை லெவலில் பேசினான். புன்னகையும் சிரிப்பும் உடல் மொழியும் தான். முழு யுத்த சூழலில்லாத சென்றிகளில் இருப்பது  ஜவான்களுக்கு அலுப்பானது. சென்றியில் என்ன கையிலடித்துக் கொண்டிருக்கிறீர்களா(சுயமைதுனம்) என்று அர்த்தம்பட்ட உடல்மொழியை கையினால் காட்டி கேட்டான். ஜவான்களும் பரவசக்களிப்பில் இவனுடைய உடல் மொழியையே தாங்களும் செய்து காட்டி புன்னகைத்தார்கள். கிருபாகரனுடைய  கெட்ட காலமோ நல்ல காலமோ அந்த வழியால் வந்த  முகாமின் ராணுவத் தளபதி கிருபாகரனின்  உடல் மொழியை மட்டுமே கண்டுவிட்டார். ஒரு பிரசித்தமான பாடசாலையில் இப்படி ஒருவனா என்று தளபதி தன் இரு இராணுவ உதவியாளர்களுடன்  எங்கள் பாடசாலைக்குள் புகுந்தார்.

ஆபத்தை உணர்ந்த கிருபாகரன் எங்கோ போய் ஒழிந்துவிட்டான். தளபதி அதிபரையும் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாக அவனை இனங்காண வந்தார். அவன் ஒரு வகுப்பிலும் இருக்கவில்லை. அதிபர் ஆங்கிலத்தில் பேசி எப்படியோ சமாளித்து தளபதியை அனுப்பிவிட்டார். சில நிமிடங்களில் நிலமை சரியானபின் கிருபாகரன் ஒன்றுமே நடக்காதது போல எங்கள் வகுப்புக்கு வந்தான். அவன் வருவதை அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் மட்டுமல்ல சென்றியிலிருந்த இரண்டு ஜவான்களும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். உண்மையான விசாரணை நடத்தப்பட்டால் தாங்களும் மாட்டுப்படுவோம் என்று பயந்தபடியிருந்தது ஜவான்களே.

அவன் திரும்பி வரும்போது தமிழாசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அவரும் எதுவும் பேசவில்லை. அவன் தன் இருக்கையிலமர்ந்து தன் தமிழ் புத்தகத்தைப் பிரித்தான். 

அடுத்தநாள் காலை அசெம்பிளியில் அதிபர் நடந்த விடயம் சம்பந்தமாக பூடகமாகப் பேசினார்.  

நீங்கள் பாடசாலை மாணவர்கள். உங்கள் அரசியல் முரண்பாடுகளை அநாகரிகச் செயல்களால் எதிர்த்து பாடசாலைக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது. இனி இப்படியான  செயல்களைச் செய்யாதீர்கள்.

அதிபர் கிருபாகரன் மீது எந்த ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவனைக்கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை. 

கிருபாகனுக்கு இயக்கத்திலோ அரசியலிலோ எந்த ஈடுபாடும் இல்லை. வயதுக்கு மீறி வளர்ந்த விடலைப் பருவக் கிளர்ச்சியில்தான் அவன் அப்படி நடந்துகொண்டான். அதிபர் பயப்படுவதற்கு காரணங்கள் இருந்தன. அக்கால தமிழ்ப்பாடசாலை அதிபர்களுக்கு இலங்கை ராணுவத்திலோ இந்திய ராணுவத்திலோ பயம் கிடையாது. இரண்டு ராணுவங்களும் அதிபர்களை பயபக்தியோடுதான் அணுகின. ஆனால் அதிபர்களுக்கு புலிகளில் மகாபயம். ஏற்கெனவே நியாயங்கேட்ட ஒரு அரை டசின் தமிழ் அதிபர்களை புலிகள் கொன்றிருந்தார்கள். அதுவும் பாடசாலையில் படிக்கும் வயதுடைய குழந்தைப் போராளிகளை ஏவியே புலிகள் பல தமிழர்களைக் கொன்றார்கள். கிருபாகரன் ஒரு இரகசிய புலி உறுப்பினனாக இருந்தால் தனக்கு ஏன் வீணான பிரச்சனை என்று அதிபர் எச்சரிக்கையாக நடந்துகொண்டார். 

உண்மையில் கிருபாகரன் தன் இளமைக் காலத்தைக் களவாடிக்கொண்டிருக்கும் புலிகளை  உள்ளூர வெறுத்தான். சைக்கிளில் பெண் மாணவிகளை துரத்வதே அவனுக்கு பிரியமான பொழுதுபோக்கு. அந்தக்கால யாழ்ப்பாணத் தமிழில் இதனை நாங்கள் சுழட்டல் என்று அழைத்தோம். எந்தப் பெட்டை திரும்பிப் பார்த்து சிக்னல் தருகிறாளோ அவளை பிறகு இலக்கு வைத்து அவளின் பின்னால் போவது. கிருபாகரன் ஒரு வெள்ளை ஐயர் பெட்டையை சுழட்டினான். அவனுடைய வயதுகூடிய நண்பர்களும் கிருபாகரனுடைய பரிவாரங்களாக அவன் அப்பெண்ணின் பின்னால் சைக்கிளில் செல்லும்போது கொம்பனி கொடுப்பார்கள். ஊருக்குள் அந்தப்பெண்ணுக்கு மவுசு அதிகரித்தது. அவளை கிருபாகரனை விட வேறு இருபொடியன்களும் சுழட்டினார்கள். 

பிறகு இந்திய அமைதிப்படை ஈழத்தைவிட்டு வெளியேறி அப்போது யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. ஸ்ரீலங்கா அரசின் பொருளாதாரத்தில் புலிகள் தங்கள் நிழல் சிவில் நிர்வாகத்தை நடத்தினார்கள். ஒவ்வொரு ஊரிலும் புலிகளின் ஒரு “ஏரியாப் பொறுப்பாளர் “ இருப்பார். இந்த ஏரியாப் பொறுப்பாளராக வருபவர்கள் தான் ஊரின் நாட்டாமையாக இருந்தார்கள். இவர்கள் சண்டைக்குப் போகப் பயந்தவர்கள் என்பதால் இயக்க உறுப்பினர்களிடம் இவர்களில் மதிப்பு இல்லை. ஒவ்வொரு ஊரிலுமிருக்கம் ஒரு வசதியான வீட்டை சுவீகரித்து ஊரான் ஒருவனின் மோட்டார் சைக்கிளையும் பறித்து வைத்து புலிகளின் சீருடையணிந்து ஊரை நாட்டாமை செய்வார். 

எங்களூரில் அப்போதிருந்த புலி நாட்டாமை தனபால் எனும் 20 வயது இளைஞர். எல்லா ஏரியாப் பொறுப்பாளர்களையும் போல அவரும் ஊருக்கு படங்காட்டினார். ஒரு தடவை தனியார் ரியூட்டறி ஒன்றுக்கு புலிப்பிரச்சாரம் செய்யவந்தவர் அங்கிருந்த பெண்மாணவிகளுக்கு படங்காட்ட மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு வரம்பு மீறி புலிகளின் அக்கால சட்டத்திலும் இல்லாத எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். ஈழப்போராட்டத்திற்கு பங்களிப்பு செய்யாமல் பெண்களை சுழட்டித்திரியும் பாடசாலை மாணவர்களுக்கு இயக்கம் மரணதண்டனை கொடுக்கும் என்று எச்சரித்தார். 

நம்மூரின் பிரபல்யமான சுழட்டல் கீரோ கிருபாகரன் தான். அவன் அவசரப்பட்டு விட்டான். தனக்கு தனிப்பட்ட ரீதியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று பயந்தவன்  தெருவோரத்தில் தேசத்துரோகியாக  அனாதைப்பிணமாக கொல்லப்படும் அவமானத்தை விட வீட்டில் மானஸ்தனாக சாவோம் என்று அன்றே தூங்கி தற்கொலை செய்துகொண்டான். 

இயக்கத்துக்கு மிகப்பெரிய சங்கடத்தை கொடுத்தது அவன் தற்கொலை. புலிகளின் நம்ம பிராந்தியத் தளபதிக்கு வேறு வழியிருக்கவில்லை. நாட்டாமை தனபாலை பதவியிறக்கம் செய்தார். 

கிருபாகரனின் தகப்பன் ஒரு வருடத்திற்கு முதல்தான் நஞ்சருந்தி தற்கொலை செய்திருந்தார்.  தகப்பனின் மரணத்திற்கு அவன் வகுப்பு மாணவர்களாக நாங்கள் போயிருந்தபோது அவனோடு ஒட்டமுடியவில்லை. அவன் இடிந்துபோயிருந்தான். அவனது வயது கூடிய நண்பர்களோடு அவனும் ஒரு அண்ணன் போலவே இருந்தான். அவனுடைய மிகநெருங்கிய நண்பன் எங்களூரின் கோயில் அர்ச்சகரின் மகனான ஐயர் அண்ணா ஒருவன். அவன் என் அண்ணாவின் வகுப்பு. 

கிருபாகரனின் மரண ஊர்வலம் அரை மைல் தூர நீளமாயிருந்தது. அதைக்கண்டு பயந்த இயக்கம்தான் அவனது தற்கொலைக்கு காரணமான தனபாலை பதவியிறக்கியது..  அந்த ஐயரண்ணன் சுடுகாட்டில் அவனது சடலத்திற்கு கொள்ளிவைக்க முதல் உணர்ச்சிப்பெருக்கில் புலம்பிக்கொண்டிருந்தான். சடலத்தின் மீது விழுந்து அழுதான். எல்லா வரம்புமுறைகளையும் மீறி ஒரு பிராமணப் பொடியன் ஒரு வெள்ளாள சடலத்தை சுடலைக்குப் போய் தொட்டதை நம்மூர் வெள்ளாளர் ஈழயுத்தம் முடிந்த பின்னாளில் ஒரு குற்றப்பத்திரிகை ஆக்கினார்கள். 

பிறகு நான் கிருபாகரனை மறந்துவிட்டேன். என் லண்டன் சின்னம்மா ஏஜென்சிக்கு காசு கொடுத்து என்னை லண்டனுக்கு எடுத்தார். 2009 ல் ஈழப்போர் முடிந்தபின் 2011ல் நான் முகநூலுக்கு வந்தேன். முகநூல் என் உளவு நிறுவனமானது. ஈழப்போர் முடிந்தபின் புலி எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் முகநூலில் மனம்விட்டு பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

அப்போது நான் ஓர் எழுத்தாளராகிவிட்டேன். கிருபாகரன் புலிகளை வெறுத்த காரணம் வேறு. நான் புலிகளை எதிர்த்த காரணம் வேறு. புலிகளை நான் விமர்சித்து முகநூலில் எழுதிய பதிவுகளை புலி ஆதரவாளர்களே இரகசியமாக படித்தார்கள். இன் பொக்சில் என்னோடு மனசார உரையாடினார்கள். நானும் மனம் விட்டுப் பேசினேன். என் முகநூலின் பொற்காலம் அது. 

நோர்வேயிலிந்த ஒரு தீவிரமான புலி ஆதாரவாள ஜெயா அக்காவும் இப்படித்தான் என் முகநூல் நண்பரானார். ஒருநாள் மில்லர் என்ற இயக்கப்பொடியனை தெரியாமா என்று கேட்டார். அவர் மில்லரைப்பற்றி சொன்ன தகவல்கள் என்னைத் தூக்கிவாரிப்போட்டது.

மில்லர் வேறு யாருமல்ல. கிருபாகரனின் தம்பி தவரூபன் தான் எங்களைவிட ஐந்து வயது குறைந்தவன். அவன் இயக்கத்துக்குப் போனது கூட எனக்குத்தெரியாது. நான் கிருபாகரன் இறந்த அடுத்த ஆண்டே ஊரைவிட்டு கொழும்புக்கு வந்துவிட்டேன்.

கிருபாகரனுக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் தான். அக்கா லண்டனுக்கு புலமைப்பரிசில் பெற்று லண்டனுக்குப் போய்க் குடியேறிவிட்டார். கிருபாகரனும் அவன் தந்தையும் தற்கொலை செய்தபின் தவரூபன் தாயுடன் வாழ்ந்து வருகிறபோதுதான் இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது. அப்போதுதான் இயக்கத்தில் இணைந்தான். 

நான் பிரபாகரனை ஒரு தடவையும் நேரே கண்டதில்லை. கிருபாகரனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தது. புலிகளின் முதல் தற்கொலைப் போராளி கரும்புலி கப்டன் மில்லரின் வீடு கிருபாகரனின் அயல் வீடுதான். 1987ம் ஆண்டு மில்லரின் அந்திரட்டிக்கு பிரபாகரன் மில்லரின் வீட்டுக்கு போயிருக்கிறார். அப்போது கிருபாகரன் அவரைக் கண்டிருக்கிறான். தம்பி தவரூபன் இயக்கத்தில் இணைந்தபோது மில்லர் என்ற பெயரையே தனது இயக்கப்பெயராக வைக்கும்படி கேட்டிருக்கிறான். அவனது வேண்டுகோள் அருளப்பட்டது. 

மில்லர் ஆன தவருபன்  புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வனின் இணையக் காரியதரிசி ஆகியிருக்கிறான். தமிழ்ச்செல்வனுடைய மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதுவதே அவனது முதன்மையான பணி. பிரபாகரன் மில்லருடைய தகவல் தொழில்நுட்பத் திறமைகளுக்காக அவனுக்கு ஒரு அப்பிள் மடிக்கணினி பரிசளித்திருக்கிறார். 

தமிழ்ச்செல்வனுடைய காரியதரிசியாக இருந்தபோதே ஜெயா அக்காவுக்கு மில்லர் நெருக்கமாகியிருக்கிறான். ஒரு தம்பியாக அவன் ஜெயா அக்காவுக்கு எழுதிய மின்னஞ்சல்கள் இன்றும் இருக்கின்றன. தன்னுடைய சொந்த அக்காவின் குழந்தை மீதான பாசத்தை அதில் கொட்டி எழுதியிருக்கிறான். இதைவிட மில்லரின் ஐம்பது புகைப்படங்களும் ஜெயா அக்காவிடமிருக்கின்றன. 

மில்லர் இயக்கத்துக்குப் போனபின் தனித்துப்போன மில்லரின் அம்மாவும் லண்டனுக்கு மகளிடம் போய்விட்டார். 

2009 மே 16 வரை  ஜெயா அக்கா மில்லரோடு தொடர்பிலிருந்திருக்கிறார். மே 17ல் தன்னுடைய மடிக்கணினியை எரித்துவிட்டு மில்லர் சயனைட் கடித்து தற்கொலை செய்துகொண்டான். அவன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. சரணடைந்திருந்தால் இன்று புனர்வாழ்வு முகாமிலிருந்து மீண்டிருக்கலாம். இன்றும் உயிரோடிருக்கலாம். லண்டனுக்கு தாயிடமும் தமக்கையிடமும் போயிருக்கலாம் என்று ஜெயா அக்கா அழுதபடியே என்னிடம் சொன்னார். அவன் அவசரப்பட்டு தற்கொலை செய்யும்போது அவனோடிருந்த சக புலிகள் அவனைக்காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். பலிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் சரணடைந்து இப்போது உயிரோடு ஊரிலும் இருக்கிறார்கள். வெளி நாட்டிலும் இருக்கிறார்கள். அவர்கள் தான் அவனது தற்கொலைச்செய்தியை ஜெயா அக்காவிடம் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள். 

ஜெயா அக்கா என்னிடம் ஒரு உதவி கேட்டார். மில்லர் தற்கொலை செய்துகொண்டது நம்பகரமான தகவல். ஆனால் லண்டனிலிருக்கும் தாயும் தமக்கையும் இன்னமும் அவன் சாகவில்லை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மில்லர் தனக்கு அனுப்பிய அவனுடைய படங்களையும் சில மின்னஞ்சல்களையும் அவன் தாயிடம் கொடுத்து அவனது இறப்புச் செய்தியை அவர்களிடம் கொடுக்க முடியுமா என்று கேட்டார். 

நான் எங்களோடு படித்த என்னைப்போல லண்டனிலேயை இருக்கும் முகுந்தனை தொலைபேசியலழைத்து ஆலோசனை கேட்டேன். 

“ உனக்கேன் தேவையில்லாத வேலை. அதுகள் அவன் சாகவில்லை என்று நம்பிக்கொண்டு வாழ நீ யாரடா அதுகளுக்கு இழவு சொல்ல. நீ உண்மையிலேயே ஒரு அப்பனுக்கும் அம்மாவுக்கும் பிறந்தவன் எண்டால் முதலில் தலைவருக்கு நீ லண்டனில செத்தவீடு கொண்டாடடா” 

என்று திட்டிவிட்டு தொலைபேசியை துண்டித்துக்கொண்டான். 

முகுந்தன் பத்து நிமிடத்தில் என்னை தொலை பேசியிலழைத்தான். அவன் குரல் அப்போது இதமாகியிருந்தது.

“ சொறி மச்சி. எனக்கு என் வாழ்க்கைப் பிரச்சனைகள். நீ புலியை விமர்சி, அது எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் எங்கள் குடும்பங்களின் வலி உனக்குப் புரியவில்லையே. என் அண்ணனும் இயக்கத்தில் சேர்ந்துதான் இறந்தான். அந்த சமரில் அவன் உடலை இயக்கத்தால் எடுக்கமுடியவில்லை. நீயும் செத்தவீட்டுக்கு வந்தாயல்லவா? என் அப்பன் என் அண்ணனின் சடலத்தை கொண்டுவராது இறப்பை அறிவித்தபோது இயக்கத்தை தூசணத்தால் திட்டியதை நீயும் கேட்டாயல்லவா? அதை விடு. இப்போ உனக்கு எங்கள் குடும்ப ரகசியத்தை சொல்கிறேன். என் அண்ணன் செத்ததை என் அம்மம்மா ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.

ஒவ்வொரு வருடமும் நாங்கள் அண்ணனின் திவசத்தை கொண்டாட காலையில் சாப்பிடாது விரதம் இரும்போம். என் அம்மம்மாக் கிழவி அன்று மட்டும் அதிகாலையில் எழும்பி தன் கொட்டிலில் அண்ணனுக்குப் பிடித்த  பாலப்பம் சுடும். மதியம் நாங்கள் ஐயர் வந்து போனபின் பாசிப்பருப்பு கறியோடு சோறு சாப்பிடும்போது கிழவியின் கொட்டிலிலிருந்து என் அண்ணனுக்கு பிடிக்கும்  மீன் கறி வாசனை வரும். இந்த பாலப்ப, மீன்கறி வாசனை ஏழு ஊர்களுக்கும் மணக்குமாம். அந்த மணத்தில் அண்ணன் தன்னை வந்து பார்ப்பான் என்று கிழவி புலம்பிக்கொண்டிருக்கும்.  மச்சி நீ சொன்னா நம்பமாட்டாய். அண்ணனின் திவசம் வெள்ளிக்கிழமையில் வந்த நாளிலும் கிழவியின் கொட்டிலில் மீன் கறி  வாசனைதான் வந்தது. 

என் அம்மாதான் அம்மம்மாவின் ஒரே பிள்ளை. அம்மம்மாவுக்கு கொள்ளிவைக்க ஆண்பிள்ளை யாரும் இல்லை. சின்ன வயசிலிருந்தே கிழவிக்கு என் அண்ணன் மேல்தான் பாசம். தனக்கு கொள்ளிவைக்க பிறந்த தலைப்பேரப்பிள்ளை என்று. அண்ணன் செத்து பத்தாண்டுகளில் கிழவி செத்தது. சாகும்போதும் அண்ணன் தனக்கு கொள்ளி வைக்க வருவான் என்று நம்பிக்கொண்டிருதது. 

உன் பேஸ் புக் பதிவுகளை நான் ஒன்றும் விடாமல் படிக்கிறேன். பின்வருவது உன் முகநூல் பதிவு. இதோ படிக்கிறேன். கேள்.

“தலைவர் இயக்கத்துக்காக வீட்டை விட்டு ஓடியபின் தலைவரைத்தேடி ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு பொலிஸ் வரும். வந்து தலைவரின் தாய் தேப்பனை தொல்லைப்படுத்தும். அதனால் அவர்களால் வல்வெட்டித்துறையில், அவர்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தும் அங்கு இருக்கமுடியவில்லை. வேறு ஊர்களில் வாடகை தேடி அலைந்தார்கள். யாரும் அவர்களுக்கு இருக்க வீடு கொடுக்கவில்லை. ஊரில் இருக்க வழியில்லாமல் தமிழ்நாட்டுக்கு ஓடினார்கள். தலைவரின் தகப்பன் மகனை தமிழ்நாட்டில் சந்திக்கவே விரும்பவில்லை. தலைவரின் திருமணம் தமிழ்நாட்டில் நடந்தபோது தாய் தகப்பன் போகவில்லை. தமக்கு கொள்ளிவைக்க தலைவரின் அண்ணன் மனோகரன் இருக்கிறான் என்றே தாய் தகப்பன் நம்பியிருந்தனர். 

பிறகு இந்திய அமைதிப்படையுடனான போரில் தலைவர் வென்று ஹீரோவாகி நோர்வே சமாதான ஒப்பந்தம் வந்தபின்னரே தமக்கு கடைசிமகன் பிரபாகரன்தான் கொள்ளிவைக்க வேண்டுமென்பதற்காக தலைவரின் தாயும் தந்தையும் தலைவரின் வன்னிக்கு போய்க் குடியேறினார்கள். கடைசியில் தலைவரின் தாய் தகப்பனுக்கு  கொள்ளி வைக்க பிரபாகரன் உயிரோடிருக்கவில்லை.  உயிரோடிருந்த அண்ணன் மனோகரனும் கொள்ளிவைக்கவில்லை. தலைவர் இறந்தபோது தலைவரின் இரண்டு ஆண்பிள்ளைகளும் உயிரோடிருக்கவில்லை.  உயிரோடிருந்த தகப்பனையும் கொள்ளிவைக்க மகிந்த விடவில்லை. தான் அரசகட்டிலேற உதவிய தலைவருக்கு மகிந்தவே கொள்ளி வச்சான்.”

மச்சி இப்ப ஆருக்கு ஆர் கொள்ளி வைக்கிறது என்பதுதான் எங்கள் குடும்பங்களின் வலி. கிருபாகரனின் குடும்பத்திலிருந்த மூன்று ஆண்களும் அற்ப காரணங்களுக்காக தற்கொலை செய்தார்கள். அந்தக் குடும்ப ஆண்களின் தற்கொலைகளைப்போல எங்கள் போராட்டமே ஒரு தற்கொலைதான். என் அம்மம்மாக் கிழவியைப்போல கிருபாகரனின் தாய்க்கிழவியும் தன் எஞ்சிய கடைசி மகனை தனக்கு கொள்ளி வைக்க வருவான் என்று நம்பி இருக்குது. அந்தக்கிழவியை நீ வாழவிடு. 

முகுந்தனுக்கு பதில் சொல்ல எனக்கு தெம்பிருக்கவில்லை. கொஞ்சநேரம் இருவரும் பேசவில்லை. 

“ மச்சி ரேக் இற் ஈஸி. குடிக்காம போய்ப்படு”  என்றுவிட்டு வைத்துவிட்டான். 

நான் ஜெயா அக்காவுக்கு போன் எடுத்து நிலமையைச் சொன்னேன். 

"ஒரு வருசத்துக்கு முதல் மில்லரான தவரூபனுடன் இருந்த ரண்டு புலிப்பொடியளை இரவுச் சாப்பாட்டுக்கு கூப்பிட்டிருந்தன். அவங்கள் குடிச்சுக்கொண்டு  மில்லரின் தற்கொலை சீனை எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாங்கள். அப்ப ஒஸ்லோவில் பனி பெஞ்சுகொண்டிருந்தது. இப்ப லண்டனிலை பனி பெய்யுதா”

 என்று கேட்டார். 

“ இல்லையக்கா, இப்ப பனி உருகுது” என்றேன்.

                நன்றி: தனி - மை - வெளி


நட்சத்திரன் செவ்விந்தியனின் சிறுகதைகள்

1. முள்ளும் மலரும்

2. கர்னலின் காமம்

3. முகாமுகம்

 





 


Comments

  1. Nice story with real sarrowful incidents.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யாழ்ப்பாணம் தோற்ற கதை