முகாமுகம் சிறுகதைத் தொகுப்பு முன்னுரை



இத்தொகுப்பிலுள்ள ஆறு சிறுகதைகளும் ஈழப்போருக்குப் பின்னைய காலத்தில் எழுதப்பட்டாலும் ஈழப்போரைப்பற்றிய கதைகள். உண்மைக்கதைகளை மையமாகக் கொண்ட சிறுகதைகள். ஒவ்வொரு கதையிலும் குறைந்தது ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் பாத்திரமாக வருகிறார். புலிகளின் தலைவர் பிரபாகரன், பிரதித்தலைவரான புலனாய்வுத் தளபதி பொட்டம்மான், புலிகளின் சிறந்த இராணுவத் தளபதியாக அறியப்பட்ட கருணா அம்மான், புலிகளில் முதல் கேணல் பட்டம்பெற்ற கிட்டு, புலிகளில் முதல் பிரிகேடியர் பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வன் ஆகியோர் பாத்திரங்களாக வருகிறார்கள்.

இது எப்படி நடந்திருக்க முடியும்? ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விட போர் வியூகங்களையே எம் பள்ளிக்காலத்தில் கேட்டு வளர்ந்தோம். எங்களுக்கு துடுப்பு மட்டையையை விட கால்பந்தாட்ட பந்தை விட ஆடுகள மைதானங்களை விட ஏ.கே 47 துப்பாக்கி, கிரனேட், போர்க்களங்கள் பற்றியே அதிகம் தெரியும். விளையாட்டு வீரர்களை விட ஈழப்போராளிகளைப் பற்றியே அதிகம் தெரியும்.

ஈழ யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் நெப்போலியன் காலத்து யுத்தங்களைப்பற்றி லியோ ரோல்ஸ்ரோய் எழுதிய போரும் சமாதானமும் என்ற நாவல். அது என்னில் பெரிய உத்வேகமாகப் படிந்துவிட்டது. இக்கணம் இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது நான் மேலே கேட்ட கேள்விக்கும் விடை கிடைக்கிறது. ரோல்ஸ்ரோய் நெப்போலிய யுத்தங்களை தன்னூலுக்கு பாடுபொருளாக்கியது போல நான் என் சிறுகதைகளுக்கு ஈழயுத்தத்தை பாடுபொருளாக்கியிருக்கிறேன்.ரோல்ஸ்ராயின் மாதிரியை நான் பின்பற்றத் தொடங்கியபின் என் பாதை இலகுவானது. கதைகளுக்கு குறைவிருக்கவில்லை. மழைபோலப் பொழியத்தொடங்கியது. எழுதினேன். இச்சிறுகதைத் தொகுதி சிறப்பாக வந்திருக்கிறதா என்பது வாசகர்களாகிய உங்களின் முடிவு. பாராட்டுக்களை விட விமர்சனங்களையே நான் அதிகம் விரும்புவது

என் சிறுகதைகளைப் படித்த சிலர் முகநூலில் உள்பெட்டியில் வந்து நீங்கள் உண்மையிலேயே விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தீர்களா? எவ்வளவு இவ்வளவு துல்லியமான விபரங்களை எழுதுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக அமைச்சர் கதிர்காமர் கொலைபற்றிய முகாமுகம் கதையைப்பற்றி.

 [போரைப்பற்றி போர்த்தளபாடங்களைப் பற்றிய ஆரம்ப அறிவில்லாதவரும் இன்றைய இணைய உலகில் முக்கியமான தகவல்களை இணையத்தில் பெறலாம். முகாமுகம் கதைக்காக குறிப்பாக குறிபார்த்துச்சுடும் துப்பாக்கிகளைப்பற்றி சிலமணிநேரம் நான் இணையத்தில்,செலவளித்தே இக்கதையை எழுதினேன்]

விடுதலைப் புலிகளில்,குறிப்பாக இரண்டாம் ஈழ யுத்தத்திற்குப் பிறகு போய்ச்சேர்ந்தவர்கள் பதினெட்டு வயதிற்கு குறைந்த சிறுவர்கள். குடும்பத்தாலோ சமூகத்தாலோ பாரபட்சம் காட்டப்பட்டு வஞ்சிக்கப்பட்டட உளச்சிக்கல்களின் பாதிப்பால் இயக்கத்தில் சேர்பவர்கள். ஐந்து வயதிலும் ஏழு வயதிலும் பெற்றோரை இழந்த நான் சட்டப்படி ஒரு அனாதை. ஆனால்,நான் கொடுத்து வைத்தவன். எனக்கு அற்புதமான தாத்தாவும் சின்னம்மாக்களும் தாய் மாமன்களும் இருந்தார்கள். அவர்களால் குறைகளின்றி வளர்க்கப்பட்டடவன் நான். ஒருபோதுமே நான் விடுதலைப்புலிகளின் உறுப்பினராக இருக்கவில்லை. என் முதல் கவிதை நூலை என் சின்னம்மாக்களுக்கு சமர்ப்பணம் செய்தேன். இந்நூல் என் தாய்மாமன்களுக்கு.

    - நட்சத்திரன் செவ்விந்தியன்

Comments

Popular posts from this blog

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்