புதிய பெயர், புதிய மத்திய குழு: அத். 03

 

எப்படி பிரபாகரன் மைக்கலை காட்டில்     எரித்தாரோ அப்படியே பிரபாகரனும்       2009ல் காட்டில்  எரிக்கப்பட்டார்

அத்தியாயம் 03
By கணேசன் ஐயர்

நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம். மைக்கல் தான் பேசுவது எதையுமே கேட்கிறாரில்லை. அவர் இயக்கத்தை விட்டு வெளியே போகப்போவதாகச் அடம்பிடித்தார் அதனால் நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என்கிறார்.

ஆம், அது நடந்துவிட்டது மட்டக்களப்பில் தமிழுணர்வுப் போராட்டங்களை நடத்திய மைக்கல் இப்போது எம் மத்தியில் இல்லை. வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங் முறைகளையும் உருவமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள் அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர் கேள்வியுற்றோம்.

இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு, நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள்.அதிலிருந்து வெளியிலிருப்போரோ, விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ, துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்லை.

இதனால் இந்தக் கொலையெல்லாம் எமக்கு நியாயமாகத் தான் தெரிந்தன. எமது இரகசியங்களைத் தெரிந்து வைத்திருந்த மைக்கல் வழியாக இவையெல்லாம் வெளியே செல்லுமானால், நாம், நமது இருப்பிடங்கள் காட்டிக்கொடுக்கப்படும். நாம் கனவுகண்ட தமிழ் ஈழம் சிதைக்கப்படும். இவ்வாறு தான் நானும் பிரபாகரனும்  ஏனையோரும் சிந்தித்திருந்தோம்.

என்ன செய்வது எமது ஆரம்ப அரசியல் தவறுகள் கொலைகளை அங்கீகரிக்கும் வரை எம்மை நகர்த்தி வந்திருக்கிறது என்பதை பிற்காலங்களில் சுயவிமரசன அடிப்படையில் பார்த்திருந்தாலும், அவ்வேளையில் எமக்கு அது நியாயமாகத் தான் தெரிந்தது.

சில நிமிடங்களின் முன்னர் எம்மோடு பேசிக்கொண்டிருந்த மைக்கல் இப்போது எம்மோடு இல்லை. இதயம் கனத்தது. தமிழீழக் கனவுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொண்டோம். பின்னர் சற்குணம், நான், பிரபாகரன், குமரச்செல்வம் ஆகிய நால்வரும் சேர்ந்து இரவிரவாக மைக்கலின் உடலைக் காட்டினுள் எரிக்கிறோம். கோரம் கவ்விய இரவு! ஓசைபடாத தமிழீழக் கனவு மட்டும் தான் எம்முள் ஒளிர்விட்டுக் கொண்டிருந்தது!!

நாம் உறங்கவில்லை. தம்பியும் குமரச்செல்வமும் புகையிரத்தில் ஏறி யாழ்ப்பாணம் திரும்புகின்றனர். நானும் சற்குணாவும் காட்டினுள் தொடர்ந்து தங்கியிருந்து இறுதியில் எரிந்து முடியும் வரை காத்திருந்துவிட்டு மதியப் புகையிரதத்தில் ஏறுகிறோம். யாழ்பாணம் நோக்கி எமது புகையிரதம் எமது நினைவலைகளோடே நகர்ந்துகொண்டிருந்தது. இந்தச் சம்பவம் எமது நான்குபேரையும் தவிர வேறு எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது.

அவர்கள், எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் முழு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாகி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிபிற்கு வருகிறோம்.

இந்த முடிபின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கத்துரை மற்றும் ராசுப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும், நட்புசக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் அப்போது ரெலோ TELO என்ற அமைப்பை உருவாக்கியிருக்காவிட்டாலும், தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.

                                 தங்கத்துரை 



பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பிலிருந்த எவருமோ அவரை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம்.தங்கத்துரை குட்டிமணி போன்றோர் பிரதானமாகக் கடத்தல் தொழிலையையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவுமே மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல், நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம்.

இவ்வேளையில் எமக்கு இன்னொரு பிரச்சனை எழுகிறது. மைக்கலைக் கொலைசெய்வதில் பங்காற்றிய குமரச்செல்வம் எம்முடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டமை எமக்கு அதிர்ப்தியையும் பய உணர்வையும் ஏற்படுத்துகிறது.

அவரைப் பலதடவை நாம் நேரடியாகவும், மற்றவர்களூடாகவும் அணுகிய வேளைகளிலெல்லாம், சுகவீனம், வேறு வேலைகள் போன்ற காரணங்களைக் கூறியனுப்பினார். சில மாதங்களில் தொடர்புகளை முற்றாகவே துண்டித்துக் கொள்கிறார். இதே வேளை இயக்கத்திற்குரிய இருபதாயிரம் ரூபா வரையிலான பணமும் அவரிடம் இருந்தது. அவற்றை எம்மிடம் ஒப்படைக்கவோ அதற்குரிய செலவீனங்களுக்குரிய காரணங்களை முன்வைக்கவோ அவர் முன்வரவில்லை.

நாம் விசாரித்த வரையில் அவர் மேடை நாடகக் கலைஞனாகவும் இருந்ததால் எமது பணத்தை வைத்து தனது நாடகத் தொழிலில் முதலிட்டு செலவாக்கியிருந்தார் எனத் தெரிந்து கொண்டோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குலம் கூட மைக்கல் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறார். ஆக, நான் மற்றும் குலம் ஆகியோர் மைக்கலைப் போலவே குமரச்செல்வமும் தவறிழைத்திருக்கிறார் அவரும் கூடக் காட்டிக் கொடுப்பாளனாக மாறலாம் என்று பிரபாகரனிடம் சுட்டிக்காட்டுகிறோம்.

மைக்கல் சுடப்பட்டது சரியானால் குமரச்செல்வமும் சுடப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை முன்வைக்க, பிரபாகரன் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார். குமரச்செல்வம் பிரபாகரனின் நெருங்கிய நண்பரும் ஒரே ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். அவ்வேளைகளில் தனக்குப் பிறகு குமரச் செல்வத்தையே எல்லா விடயங்களிலும் முதன்மைப் படுத்துவார்.

இறுதியில், குமரச்செல்வத்தைப் பேசுவதற்கு அழைத்தால் அவர் வர மறுத்துவிடுவார், தவிர வல்வெட்டித்துறையில் வைத்து பொதுமக்கள் மத்தியில் சுட்டால் ஊரில் பிரச்சனையாகிவிடும் அதனால் வேறு சந்தர்ப்பங்கள் வரும் போது கொலை செய்துவிடலாம் என்கிறார். ஆனால் இறுதிவரை அவர் கொலை செய்யப்படவே இல்லை.

இப்போது மத்திய குழுவில் அவரும் இல்லை. உதயகுமார் தான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் எனக் காரணம் காட்டித் தொடர்புகளைக் குறைத்துக் கொள்கிறார். பின்னதாக முற்றாக தொடர்பற்றுப் போகிறார். சில மாதங்களுக்கு உள்ளாகவே பட்டண்ணாவும் உடல் நிலை குன்றியிருந்த காரணத்தால் தொடர்புகளை நிறுத்திக் கொள்கிறார். இப்போது மத்திய குழுவில் நானும் தம்பி பிரபாகரனும் மட்டுமே எஞ்சியிருந்தோம். ராகவன் போன்றோர் இன்னும் மாணவர்களாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த சூழலில் ஆதர்வாளர் மட்டத்திலேயே தொழிற்பட்டனர்.

எமது ஆரம்ப உறுப்பினர்களின் நிலையற்ற தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தில் தனது குடும்பச் செலவிற்கு என்று ஐந்தாயிரம் ரூபா பெற்றுக்கொண்ட ஜெயவேல் இப்போது நம்மை நோக்கி வருவதே இல்லை. அவர் ஒரு மீன் பிடித் தொழிலாளி தான். எம்மிடம் பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அதை வைத்து ஆடம்பரமாக செலவாடித் திரிவதாக நாம் தகவல் அறிந்திருந்தோம். இவர் பண்ணைக்கு வருவார் என வவுனியா புகையிரத நிலையத்தில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த சம்பவத்தை முன்னமே கூறியுள்ளேன். இவையெல்லாவற்றையும் பிரபாகரன் மறுபடி நினைவுறுத்தி, அவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறார்.

பிரபாகரன் எம்மிடம் சொல்கிறார்,கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும். அதை நீங்கள் தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.வழமை போலவே எமக்கும் அது நியாயமாகப் படுகிறது. ஆக, கொலை செய்யப்பட வேண்டும் என்ற முடிபுக்கு வருகிறோம்.

ஜெயவேலைக் கொலைசெய்வதற்கான பொறுப்பை சற்குணத்திடமும் என்னிடமும் தம்பி பிரபாகரன் ஒப்படைக்கிறார். ஆரம்பத்தில் நாம் தயங்கினாலும், பின்னர் பிரபாகரனின் தொடச்சியான வற்புறுத்தியதால் இணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னதாக ஜெயவேலைச் சுட்டுக் கொலை செய்வதைவிட விஷம் கொடுத்துக் கொலைசெய்வதே சிறந்த வழியென்று பிரபாகரன் எமக்கு அறிவுறுத்துகிறார்.

அதற்கான விளக்கத்தை அவரே முன்வைக்கிறார். ஜெயவேல் கராத்தேயில் தேர்ச்சி பெற்றவர். நாங்களோ கொலைக்குப் புதியவர்கள்; அனுபவமற்றவர்கள். ஆக, நாம் கொலைசெய்ய முற்படும் போது அவர் எங்களை மீறி எம்மைத் திருப்பித் தாக்கிவிடுவார் என்பதே பிரபாகரனின் அந்த விளக்கமாக இருந்தது.

இது கூட எமக்கு நியாயமாகத் தான் தெரிகிறது. பின்னதாக ஜெயவேலைப் புளியங்குளத்திற்கு அழைக்கிறோம். கொழுத்தும் வெயிலில், நானும் சற்குணமும், குலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நேரத்தை விரட்டியடித்துக் கொள்கிறோம். நேரம் நகர்கிறது. ஒரு புறத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கம். மறுபுறத்தில் எம்மைத் தடுக்கும் மனிதாபிமானமும் பய உணர்வும். எமது நீண்ட மனப் போராட்டம் மூளையில் உட்கார்ந்து சோகமாய் குடைந்து கொண்டிருக்க ஜெயவேல் வருகிறார். நாம் எதிர்பார்த்திருந்தது போலவே அவர் நேரத்தைத் தவறவிடாமல் அங்கு வந்து சேர்கிறார்.

அன்றெல்லாம் பல்தேசியக் கம்பனிகளின் கோலாவும், பன்டாவுமா இருக்கும்? வெறும் சோடா தான். இலங்கையின் தேசிய உற்பத்தி! நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். சில நிமிடங்களில் எமது கண்முன்னேயே ஜெயவேல் மரணிக்கப் போகிறார்.

ஜெயவேல் எம்மோடு உட்கார்ந்து கொண்டு நண்பர்கள் போல உரையாடுகிறோம். சோடாவை அவர் தனது வாய்க்கருகே கொண்டு போகிறார். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். சோடாவைச் சுவைத்த ஜெயவேல் அது கசக்கிறது என்றும் தனக்குக் அருந்த விருப்பமின்றி இருப்பதாகவும் கூறி அங்கேயே வைத்துவிட்டு சில மணி நேரங்களின் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஜெயவேல் இறுதியில் தப்பிவிட்டார். ஒரு கொலை நிகழவில்லை. அவர் நின்று, நேர்கொண்ட பார்வையுடன் எம்மை விட்டு நகர்கிறார்.

இதே காலப் பகுதியில், சில இளைஞர்கள் இணைந்து உரும்பிராய் பெற்றோல் நிலைய நடராஜாவை கொலை செய்கின்றனர். இந்தக் கொலையை மேற்கொண்டவர்கள் உரும்பிராய் பாலா, தங்கா , பேபி சுப்பிரமணியம் ஆகியோர். நான் அறிந்தவரை பேபி சுப்பிரமணியம் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் இதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றே கூறப்பட்டது. தங்கராஜாவும், பாலாவும் இதில் நேரடியாக ஈடுபட்டனர் என்பது உண்மை.

                   Baby சுப்பிரமணியம் 1994



இந்த நடராஜா என்பவரே சிவகுமாரனைக் காட்டிகொடுத்தார் என்பதே அவர் மீதான குற்றசாட்டு. இது தவிர அப்போது ஆட்சியிலிருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் கூட. கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய இந்த மூவரும் தன்னிச்சையாகவே இதை மேற்கொண்டனர். இவர்கள் எந்த நிறுவன மயப்பட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல எனினும் இவர்கள் மூவருமே தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள்.

உரும்பிராய் பாலா இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விபரம் தெரியவர அவர் தேடப்படுகிறார்.சில மாதங்களின் பின்னர் இவ்வாறு தேடப்படும் சந்தர்ப்பத்திலேயே பாலா, பேபி சுப்பிரமணியம், தங்கா ஆகிய மூவரும் எம்மைப்பற்றி அறிந்து எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தொடர்புகளூடான உரையாடல்களின் பின்னர் அவர்களும் எம்மோடு இணைந்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதே வேளையில் லண்டனிலிருந்து இலங்கை வந்திருந்த விச்சேஸ்வரன் என்ற விச்சு என்பவரும் எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.

இப்போது நாம் இருவரும் தான் எல்லா முடிபுகளையும் மேற்கொள்வோம். மறு புறத்தில் எமது வேலைப் பழு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. பண்ணைகளை விஸ்தரித்தல், இராணுவப் பயிற்சி, புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல், பணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற பல்வேறு சுமைகள் எமது இருவர் பொறுப்பிலும் வந்து சேர்கிறது.

துரையப்பா கொலைச் சம்பவத்தில் திட்டமிடல் ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவிசெய்த நாகராஜாவும் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார். பின்னர் அவர் கொழும்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை பார்த்துக் கொண்டே எம்மோடு தொடர்புகளைப் புதுப்பித்து இணைந்து கொள்கிறார். இதே வேளை பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள உதவிய கணேஸ் வாத்தி எம்மோடு தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் இந்த இருவரும் புதிய புலிகளில் இணைந்து கொள்கிறனர். இருப்பினும் இவர்கள் இருவரும் தமது உழைப்பிற்கான தொழிலைக் கைவிட்டாமலே பகுதி நேரமாக எம்மோடு உறுதியாகப் பங்காற்ற முன்வருகின்றனர்.

இரண்டு பேராகச் சுருங்கிப் போன மத்திய குழு தவிர, பண்ணையில்ருந்த உறுப்பினர்கள் முழு நேரமாக பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் புதிய மத்திய குழு ஒன்றைத் தெரிவு செய்யும் முடிபிற்கு வருகிறோம்.

அந்த மத்திய குழுவில், பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா, விச்சு, நான், பிரபாகரன், , குலம், பின்னதாக இந்தியாவிலிருந்து வந்து திரும்பி வந்த பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இந்த மத்திய குழுவில் தான் புதிய புலிகள்(TNT) என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்று ” உத்தியோக பூர்வமாக” பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1976 இறுதிப்பகுதிதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பமாகவும் அமைகிறது. இந்த மத்திய குழுத் தெரிவுக் கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பண்ணையில் தான் நடைபெறுகிறது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன்மொழிகிறோம். நானும் கூடத் தான். எமது இயக்கத்தின் புதிய பெயரைத் தெரிவு செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டு விவாதிக்கிறோம். வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டு இறுதியாக பல்வேறு தெரிவுகளின் கூட்டாக “தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் உருவாகிறது.

மத்திய குழு உறுப்பினர்கள் குறித்த சிறு விபரக் குறிப்பு, இந்தியா சென்றிருந்த பற்குணத்தின் மீழ் வருகை, தமிழீழ விடுத்லைப் புலிகளின் ஆரம்பக் குறிப்புகள், சில தாக்குதல் சம்பங்கள் போன்றன பகுதி நான்கில் வரும்…

தொடர்பான கட்டுரைகள்

1. மேதகு பட விமர்சனம்

2. அன்ரன் பாலசிங்கம் வரலாறு 

3. Me Too: ஈழப்பெண்டிர் புரட்சி

 

Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

யாழ்ப்பாணம் தோற்ற கதை