அஞ்சலி: திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்

  

             


  By நட்சத்திரன் செவ்விந்தியன்

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்” என்றிருக்கிறேன். பிரபாகரன் இறந்து பதினாறு வருடங்களின் பின் இந்தப்பெரும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. இது பிரபாகரனுக்கான அஞ்சலி எழுதும் நாள். சட்டப்படி. இந்நாள் ஆகஸ்ற் இரண்டு 2025.

பிரபாகரன் இறந்தபோது நான் துயரப்படவில்லை. சந்தோசப்பட்டேன். எனது என் தலைமுறையினரது அழகிய இளமையை, இளமைக்காலத்தைக் காவு கொண்டவர் அவர். துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதக்காரணம் அவரது மரணக்கதையை அவரது விசுவாசிகளே புனைந்து விற்கத் துணிந்தமைதான்.

எல்லோருக்கும் நஞ்சுமாலை அணிவித்த தலைவர் தான் நஞ்சுமாலை கடிக்காமல் எதிரிகளிடம் சரணடைந்தார் என்கிற புனைகதையை அவரின் எதிரிகளை விட விசுவாசிகளே ஆக்ரோசமாகப் பரப்புகிறார்கள். சுயநலன் சார்ந்த அவரகளின் எதிர்கால அரசியலுக்கான சூது அது. அதுதான் இன்றைய என்னிரவு துயர்மிகு வரிகளுக்கான காரணம்.

இரண்டாவது என் இளமையைப்போல தம் மகத்தான போராட்ட இளமைக்கால போராட்டப் பங்களிப்பை பிரபாகரன் அண்ணையிடம் காவுகொடுத்த என் மாற்றுக் குலத்தவர்களான மாற்றுக் கருத்தாளர்களும் மாற்று இயக்கக்காரர்களும். பிரபாகரனின் பாசிச அரசியலை தர்கரீதியாக சரியாக விமர்சித்து வரும் இவர்களும் பிரபாகரனின் மரணத்தில் மட்டும் காய்தல் உவத்தலோடு “அவர் புறமுதுகிட்டு ஓடினார். சரண்டர் ஆனார். சாவுக்குப் பயந்த கோழை” என்றெல்லாம் அவதூறு எழுதுவதுதான். அதை நம்புவது அல்லது நம்புவதுபோல் பாவனை பண்ணுவதுதான். அவர்கள் கேட்க விரும்பும் வரலாறல்ல நடந்தது. சரியோ தவறோ, சுயநலப் பாசிசமோ தமிழ்த்தேசியமோ எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். பிரபாகரன் சரணடையவில்லை என்பது முதல் FACT. வெளிப்படையாகச் சொல்கிறேன். கொலம்பஸ் எப்படி ஒரு நல்ல கடலோடி இல்லையோ அப்படித்தான் பிரபாகரனும் ஒரு நல்ல சோல்ஜர்- Soldier இல்லை. பிரபாகரன் 2009 இறுதி யுத்தம் வரை எந்த சமரிலும் பங்குபற்றியவர் அல்ல. அவர் வாழ்வின் முதலும் இறுதியுமான சமர் மே 17 இன் பின் அவர் தப்பியோடும் சமர்தான். அந்த ஒரேயொரு சமரில் அவர் போரிட்டார். இறுதி மூச்சு இருக்கும்வரை போரிட்டார். புறமுதுகில் வெடிவாங்கி சாகாமல் நெற்றிப் பொட்டில் திறந்த கண்களோடு வெடிவாங்கி “இறவா வரம் பெற்ற வீரன்” போல் செத்தார். தன் வாழ் நாள் பூராக றிஸ்கி சமரிலோ அல்லது றிஸ்கியான வங்கிக் கொள்ளைகளிலோ, அம்புஷிலோ பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கி தன்னைப் பாதுகாத்துக்கொண்ட நம் “தேசியத் தலைவர்” வேறு வழியின்றி முதலும் கடைசியுமான தன் சமரில் நெற்றியில் வெடிவேண்டி வீரச்சாவடைந்தார்.

அவர். அவர் பிரபாகரன் என்று எழுதுகிறேன். அவன் என்று எழுதவில்லை. என் இளமையைக் காவுகொண்டவர். ஈழப்போராட்டத்தில் அதிகளவான அழிவுகள், சரியாகச் சொல்லப்போனால் தொண்ணூறு வீதமான அழிவுகள் 1987ம் ஆண்டில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் தன் தனிப்பட்ட நலன்களுக்காக குழிபறித்தபின் ஏற்பட்டவையே. அந்த வகையில் பிரபாகரன் ஒரு மஹா பாசிஸ்ட்.

இருந்தும், ஜே.வீ.பி தலைவர் கண்டி மலைச்சீமையில் ஒரு அழகிய கிராமத்தில் குடும்பத்தோடிருந்தபோது கைது செய்யப்பட்டபோது நஞ்சு கடித்தோதுப்பாக்கியால் தன்னைச்சுட்டோ செத்திருக்கலாம். செய்யவில்லை. ஜானக பெரேரொ அவரைக் கைது செய்தபோது அவர் கேட்டுக்கொண்டதோ

1. தான் தான் ரோகண விஜயவீரா என்று ஒப்புக்கொண்டது

2. தன்னை என்னவும் செய்யுங்கள். மனைவி பிள்ளைகளுக்கு மன்னிப்பளியுங்கள் என்று கெஞ்சியது.

பிரபாகரன் அப்படியொன்று நடக்க வாய்ப்பளிக்கவில்லை. தன்னை கைது செய்யும் சீனுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவரின் தப்பியோடும் சமருக்கு சில நாட்களுக்கு முன்னரே சரணடைந்த அவரின் மனைவி மக்கள் உட்பட்ட புலிகளின் தளபதிகள் சரணடையும் போது வஞ்சகமாகச் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற உண்மை அவருக்குத் தெரியும். அதற்குப் பிறகும் அவர் சரணடையும் முட்டாள் தனமான முடிவெடுத்திருக்கமாட்டார். அவ்வளவு கோழை அல்ல அவர். அவன் என்கிற தமிழை எழுதாமல் அவர் என்கிற தமிழை அவர் என் இளமையைக் காவுகொண்ட பாசிஸ்ட் ஆக இருந்தாலும் நான் எழுதுவதற்குக் காரணம் இதுதான். மதிக்கப்படவேண்டிய எதிரி அவர்.

திருமண ஊர்வலங்களை விட அழகானவை மரண ஊர்வலங்கள். மரண வீடுகள் சமாதான ஒப்பந்தங்களுக்கான கதவு திறக்கும் இடங்கள். எதிரிகளினதும் துரோகிகளினதும் பங்காளிச் சண்டை போட்டவர்களினதும் மனச்சாட்சிகள் சந்திக்கும் அழகான சந்திகள். இளமையைவிட அழகானவை இறுதி ஊர்வலங்கள். இழவு வீடுகள்.

கல்யாண வீட்டுக்குப்போய் களைத்து வந்திருப்பவர்களைத்தான் பார்த்திருப்பீர்கள். இழவு வீட்டுக்குப்போய் களைத்து வருபவர்கள் எந்த ஊரிலுமில்லை.

ஊரில், ஈழத்தில், தமிழகத்தில் இந்த ஆகஸ்ற் இரண்டாம் நாள் இரவு முதுவேனில் காலம். ஆக இளவேனில் காலத்தில் மே 19ல் இறந்த தலைவருக்கு பதினாறு ஆண்டுகள் கடந்து முதுவேனில் காலம் காடாத்து செய்கிறார்கள். அது அப்படியொன்றும் அழகில்லாததல்ல.

தொடர்பான கட்டுரைகள்

1. பிரபாகரனின் உண்மை வரலாறு



Comments

Popular posts from this blog

அர்ச்சுனா: அர்த்தமும் அசிங்கமும்

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்