பிரபாகரனின் பிரேத பரிசோதனை
By நட்சத்திரன் செவ்விந்தியன்
அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். நான் ஒரு பிரேத பரிசோதனை அதிகாரி அல்ல. ஒரு பத்திரிகையாளராக எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அத்தகவல்கள் நம்பகத்தன்மை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு உரிய விசாரணை, ஆய்வு, அறம் திறமைகளின் அடிப்படையில் பிரபாகரனின் மரணம் பின்வருமாறுதான் நடந்திருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறேன். அதனை மறுத்து முறையான விஞ்ஞான விவாதத்திற்கு வருவதும் ஆய்வு விசாரணை மரபுகளில் படி ஏற்கக்கூடியதே.
இன்றைய சியோனிச இஸ்ரேலில் இருக்கிற குறைந்தபட்ச சனநாயக, உடற் கூறியல் – பிரேதபரிசோதனை- நீதி நடைமுறைகளைக்கூட விழுமியங்களைக்கூட ஈழப்போரின் இறுதியுத்தத்தில் மகிந்த அரசு பேணவில்லை. மகிந்த அரசு இன்றைய இஸ்ரேல் காசா மக்களை பட்டினி போட்டுக் கொல்வது போல கொல்லவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை. ஆனால் மகிந்த அரசு முறையான சட்டரீதியான மரண விசாரணைகளை ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் சொல்லப்பட்டது போல் செய்யவில்லை.
மே 19ல் கைப்பற்றப்பட்ட பிரபாகரனின் இறந்த உடல் சட்டப்படி ஒரு வைத்தியசாலை சவக்கிடங்குக்குக்கு(Mortuary) கொண்டுசெல்லப்பட்டிருக்கவேண்டும். அங்கு ஒரு மரணவிசாரணை அதிகாரி பிரேத பரிசோதனை செய்திருக்கவேண்டும். சரணடைந்த அவரின் பெற்றோர்கள் சடலத்தை இனங்காட்டியிருக்கவேண்டும் மரபணு சோதனை செய்யப்பட்டிருக்கவேண்டும். அப்படி எதுவும் நடக்காது கருணாவும் தயா மாஸ்டரும் ரெலிவிசன் கமெராக்களுக்கு பிரபாகரன் சடலத்தை அடையாளம் காட்டியதோடு கதம். கதம். சடலத்தை சட்டத்திற்கு புறம்பாக இந்து கிரியை மரபுகளின் படி எரித்துவிட்டார்கள். ஒக்கம இவராய். இது இலங்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறிய ஒரு குற்றம்.
ஒசாமா பின்லேடனின் கொலை கூட மரண விசாரணை இல்லாது கடலில் இஸ்லாமியச் சடங்குகளோடு மட்டும் நடந்ததுதான். ஆனால் அது அமெரிக்க மண்ணில் நடந்த கொலையல்ல. ஏற்கெனவே சர்வதேச சட்டங்களை மீறி இறையாண்மை மிக்க பாக்கிஸ்தான் மண்ணில் நடந்த கொலை. ஆனால் பிரபாகரனின் போரக்கள சமரில் நடந்த மரணம் ஸ்ரீலங்கா சோசலிசக் குடியரசின் சட்ட ஆளுமைக்குட்பட்ட பிரதேசத்தில் நடந்தது.
மகிந்த அரசாங்கம் ஒரு மோசடியான மாபியா அரசாங்கம். அது முறையான தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததல்ல. அது புலிகளுக்கு காசு கொடுத்து வன்னி மக்களை வாக்களிக்கவிடாமல் செய்து மோசடியாக தேர்தலில் வென்ற அரசாங்கம். சர்வதேசத்திற்கு சேதி சொல்லி சரணடைந்த முன்னணி புலி உறுப்பினர்களைக் கொன்ற, போரியல் குற்றங்களை மீறிய அரசாங்கம். அதன் தொடர்ச்சியாக அதன் விளைவாக சாட்சியங்களை மறைக்க பிரபாகரனின் மரணத்தையும் சடைந்தது.
இதிலிருந்துதான் எல்லா வதந்திகளும் பிறந்தன. பிரபாகரனும் சரணடைந்தார். அவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார். மகிந்த முன் மண்டியிட வைக்கப்பட்டார். பிறகு கோடாலியால் கொத்திக்கொல்லப்பட்டார் என்கிற வதந்திகள்.
நான் தெரியாமல்தான் கேட்கிறேன். மே 18/19 க்கு முதல் சர்வதேசத்திற்கு சேதி சொல்லி வெள்ளைக்கொடியோடு சரணடைந்த விடுதலைப்புலிகளின் முன்னணி உறுப்பினர்களும் பிரபாகரனின் மனைவியும் மகளும் வஞ்சகமாகக் கொல்லப்பட்டது பிரபாகரனுக்கு நன்கு தெரியும். அதற்குப் பிறகும் அவர் முட்டாள்தனமாக சரணடைந்திருப்பாரா? அவ்வளவு கோழையோ முட்டாளோ அல்ல அவர். பிரபாகரன் 1987க்குப் பிற்பட்ட ஈழ யுத்தங்களால் என் இளமையைக் காவு கொண்டவர். அதற்காக அவரைப் பற்றி வதந்திகளை புனைய நான் தயாரில்லை. என் ஊடக அறம் அதற்குத் தயாரில்லை.
பிரபாகரன் ஒரு காட்டான். அவர் ஒருபோதும் சிங்களவர்களை நம்பியவர் அல்ல. அவர் எப்போதும் தன் பாதுகாப்பில் மிகக் கவனமாகவே இருந்தவர். சிங்களவர்களை நம்பாத அவர் தமிழகத்தையும் இந்தியாவையும் நம்பினார். அதனால்தான் 1987ல் இந்தியா யாழ்ப்பாணத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பியபோது அதிலேறி இந்தியா போனார். ஆனால் அதே அவரே பிரேமதாசா வன்னிக்கு ஹெலிகொப்டர் அனுப்பியபோது அதிலேறி கொழும்புக்கு செல்லவில்லை. பிரதித் தலைவர் மாத்தையாவையே அனுப்பினார். 2002ல் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்துக்கும் இடையில் நோர்வே சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போதும் ரணிலும் பிரபாகரனும் நேருக்கு நேரே சந்திக்கவில்லை.
இந்த இடத்தில் சீனப்புரட்சியில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லவேண்டும். மாவோ தன் பாதுகாப்பையே றிஸ்க் எடுத்து 1945ம் ஆண்டில் சீன தேசியவாத அரசுத் தலைவர் Chiang Kai-shek அவர்களை Chongqing என்கிற சீன நகரத்துக்குப் போய்ச் சந்தித்தார்.
உண்மையில் தர்க்கரீதியாக நடந்திருக்கக் கூடியது என்ன? 2008ம் ஆண்டு சனவரி முதல்நாள் மகிந்த அரசு புலிகள் நோர்வே சமாதான ஒப்பந்திற்கு விசுவாசமாக இல்லை என்று புலிகள் மீது போர்ப்பிரகடனம் செய்யும்போதே புலிகள் தோற்பது உறுதி என்பது புலனாய்வுத் தளபதி பொட்டம்மானுக்குத் தெரியும். ஆனால் பொட்டம்மானுக்கு அதை பிரபாகரனிடம் சொல்லும் திராணி இல்லை. அதாகப்பட்டது சொன்னாலும் தலைவர் கேட்கப்போவதில்லை என்பது புலனாய்வுத் தளபதிக்கு நன்கு தெரியும். தலைவர் ஒரு சூதாடி. சூதாடி Warlord. வாழ்நாள் பூராக தலைவர் தொடுத்த அனைத்து சமர்களும் போர்களும் சூதாட்டமே. 1986ல் ரெலோ மீது தொடுத்த கொலைமுயற்சி சூதாட்டம். தலைவருக்கு தமிழக முதல்வர் MGRன் ஆதரவு இருந்திருக்கலாம். ஆனால் நடுவண் அரசு கொஞ்சம் சுதாரித்திருந்தால் தலைவரும் புலியும் காலி. பிறகு தலைவர் செய்த மிகப்பெரிய சூதாட்டம் இந்திய சமாதானப் படைகளோடு போரிட்டது. எதிர்பார்க்கப்படாமல் நடுவண் ராஜீவ் அரசு கவிழ்ந்ததால் தலைவருக்கு வெற்றி. பிரேமதாசவும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சேடமிழுத்த புலிகளுக்கு உதவிக் காப்பாற்றினார்.
ஆனால் 2008 முதல் நாளில் மகிந்த அரசாங்கம் புலிகள் மீது போர்ப்பிரகடனம் செய்தபோது பொட்டம்மானுக்கு நடக்கப்போவது நன்கு தெரிந்திருந்தது. அமெரிக்கக் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின் புலிகள் சர்வதேசச் சந்தையில் ஆயுதம் வாங்கமுடியாது. முடியவில்லை. என்பது பொட்டம்மானுக்கு தெரியும். தலைவருக்கும் தெரியும். ஆனால் சூதாட்ட தலைவரின் நிகழ்தகவு கணிப்புக்கள் வேறு. கைதேர்ந்த புலனாய்வு தளபதியின் நிகழ்தகவு கணிப்புக்கள் வேறு.
ஒசாமா பின்லேடன் தப்பியது போல ஒரு ஒப்பறேசனை பொடடம்மான் 2008 சனவரியிலேயே பிரபாகரனிடம் சொன்னார். தமிழகத்துக்கு தப்பிப் போய் பாக்கிஸ்தானில் பின்லேடன் வாழ்ந்த மாதிரி வாழலாம் என்று. இன்று போய் போருக்கு நாளை வரலாம் என. தலைவர் கேட்கவில்லை.
அதற்குப் பிறகு 2008 சனவரியிலிருந்து 2009 மே 19 வரை நடைப்பிணமாகவே பொட்டம்மான் வாழ்ந்தார். தலைவரின் மீதான தன் விசுவாசத்திற்காக தன் குடும்பத்தையே காவு கொடுத்தார். இன்று வரையும் பொட்டம்மானினதோ அவரது குடும்பத்தினரதோ இறப்பு எப்படி நடந்தது என்பது ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களுக்குத் தெரியாது. எள்ளோடு சேர்ந்து எலிப்புழுக்கை காயுது கூட இருந்த குற்றத்திற்காக என்று இறுதிவரையும் விசுவாசமாக இருந்து மே 17/18 இரவில் தன் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர்களைக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தடயங்கள் இல்லாது எரிக்கவைத்தார்.
2006ம் ஆண்டிலிருந்தே புலிகள் புலனாய்வுப் போரில் தோற்றுக்கொண்டிருப்பதும் பொட்டம்மானுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஏறத்தாள பிரதிப் புலனாய்வுத் தளபதி நியூட்டனின் Counter-espionage நடவடிக்கை கொழும்பில் பிசகியதோடான ஆரம்பம். பொட்டம்மான் கொழும்புக்கு அனுப்பிய பல புலி புலனாய்வு ஒற்றர்கள் நிலமையின் உக்கிரத்தை அறிந்து (அவர்கள் கெட்டிக்காரர்களாக இருந்ததால் தான் இது சாத்தியம்) இலங்கைப் புலனாய்விடமே சரணடையத் தொடங்கிவிட்டார்கள். அதாகப்பட்டது வன்னியிலிருந்து வெளியேறிய கணத்திலிருந்தே தாங்கள் ஸ்ரீலங்கா புலனாய்வு கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்கிற மயிர் கூச்செறியும் யதார்த்தத்தை உணரத் தொடங்கியபோது. முன்னையைப் போல உடனடியாக தங்களை கைது செய்யாமலோ கொல்லாமலோ கண்காணிப்பு வலயத்தில் வைத்திருந்து பூனை- எலி வேட்டை விளையாடுமளவுக்கு ஸ்ரீலங்காப் புலனாய்வு வலையமைப்பு பலமடைந்துவிட்டது. வன்னிக்கோ அல்லது வெளி நாடொன்றுக்கோ ஓடமுடியாதளவு கண்காணிப்பின் உச்சத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்த புலி ஒற்றர்கள் ஒவ்வோன்றாக சரணடைய ஆரம்பித்தார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம், சரணடைவதும் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு புலனாய்வு நடவடிக்கைதான். அடுத்ததாக தான் கைது செய்யப்படும் ஆபத்து உச்சமாக இருக்கிறது என்பதை அறிந்த புலி ஒற்றர் சரணடைந்து சில முக்கியமற்ற தகவல்களையும் சில பிழையான தகவல்களையும் எதிரிக்கு கொடுத்து அவர்களின் நம்பிக்கைப் பெற்று டபிள் ஏஜண்ட் ஆகி தன் இயக்கத்தின் நலனை முதன்மைப் படுத்துவது.
ஆனால் அதிக எண்ணிக்கையில் புலி ஒற்றர்கள் கொழும்பில் சரணடைய ஆரம்பித்தபோதோ பொட்டம்மானுக்கு புலிகளின் புலனாய்வுக்களம் தோற்றுவிட்டது என்று தெரியவந்தது.
சூதாடி Warlord பிரபாகரனோ இந்திய நடுவண் அரசு தேர்தல்களை நம்பியிருந்தார். பாரதிய ஜனதாக் கட்சி வெல்லும் என்று அவரை கோபாலசாமி போன்றவர்கள் நம்பவைத்திருந்தார்கள். சூதாடிகள் மில்லியன், பில்லியன், றில்லியன் இல் ஒன்று என்றாலும் நம்புவார்கள். அதுவரை தமிழ் மக்களை பணயக்கைதிகளாகவும் மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்திய புலிகளின் தலமை மே 16ல் இந்தியத் தேர்தல் முடிவுகள் அறிந்து தம் கட்டுப்பாட்டில் தப்பியோடாமல் எஞ்சியிருந்த மக்களையும் தப்பியோட அனுமதித்ததோடு இரண்டாம் கட்டத் தளபதிகளும் பிரபாகரன் உட்பட்ட தலைவர்களின் குடும்பங்களும் வெள்ளைக் கொடியோடு சரணடைய முடிவெடுத்தார்கள். பிறகு நடந்தது உங்களுக்கு தெரிந்த சரித்திரம்.
இப்போது பிரபாகரனின் கதி பற்றி மூன்று சாத்தியமான கதையாடல்கள்(Narrative) உலாவுகின்றன.
1. அவர் சரணடையவுமில்லை. தப்பியோடும் சமரில் சாகவுமில்லை. கடல்வழியாக பர்மாவுக்குத் தப்பிச்சென்றுவிட்டார்.
2008 ஆரம்பத்தில் பொட்டம்மானின் ஆலோசனையைக் கேட்டு பிரபாகரன் தப்பிச் செல்ல முடிவெடுத்திருந்தால் பர்மாவுக்கல்ல, நியூ யோர்க்குக்கோ. தமிழகத்துக்கோ, சைபீரியாவுக்கோ, ஆப்கானிஸ்தானின் தலிபான் கட்டுப்பாட்டிலிருந்த மாநிலங்களுக்கோ, ஏன் உலகின் எப்பகுதிகளுக்கும் சென்றிருக்கலாம். மே 16, 2009க்குப் பிறகு பிரபாகரன் வன்னிக் காடுகளை விட எங்கும் கடல்வழியாக தப்பிச் செல்லவாய்ப்பிருக்கவில்லை.
2. பிரபாகரன் சரணடைந்தார். கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டார். இந்த புல்ஷிட் கதை பொய்யென்று நாம் மேலே ஆதாரங்கள், தர்க்கங்களுடன் எழுதியிருக்கிறோம்.
3. மே 17/18ல் முற்றுகையை உடைத்து நடந்த சமரில் பிரபாகரனும் ஒரு சிறு அணியும் முதல் வளையத்தை உடைத்து அடுத்த வளையத்துக்குள் தப்பிச்சென்றது..அடுத்தநாள் அதிகாலை நடந்த சமரில் பிரபாகரன் உட்பட்ட அனைவரும் அச்சமரில் கொல்லப்பட்டனர். பிரபாகரன் எதிரியின் நெற்றி வெடி வேண்டி செத்திருக்கலாம். அல்லது தோற்கும் சமரின் உக்கிரத்தை அறிந்து தானே தன் கைத்துப்பாக்கியால் தன்னைச் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். இது விடயமாக “கேணல்” கருணா சொல்லும் வீடியோவில் நம்பக்கூடிய சில நியாயத் தருக்கங்கள் உள்ளன. மற்றது யாரையும் நம்பாத தலைவர் கடைசிக் கணங்களில் சயனைட் நஞ்சையும் நம்பியிருக்க மாட்டாரல்லவா?
அத்தகைய ஒரு போரின் புகைமூட்டத்திலும் தன்னுடைய மனைவி மட்டுமே அறிந்த தன் நிர்வாணத்தை உலகத்திடம் காவுக்கொடுத்தது அவரின் சூதாட்டமன்றி வேறல்ல. இவ்விடத்தில் தலைவரைவிட தடயங்கள் இல்லாமல் தன் மட்டக்களப்பு பேரழகி மனைவியோடு செத்த அம்மான் தம்புரான், பெம்மான்.
கடைசியாக தலைவரின் பிரேத பரிசோதனைக்கு வருவோம். தன் தலையில் தான் வெடிவைத்தோ எதிரியின் வெடிவாங்கியோ செத்த தலை தலைவரின் தலை மாதிரி இருக்கவில்லை. உடல் தலைவரது. உடலோடு சேர்ந்த தலையும் தலைவரது. உடனிருந்த வேறு ஆதாரங்களும் அதனை நிரூபித்தன. ஆனால் முறையான சட்டவிசாரணை இன்றி, மரபணு விசாரணை இன்றி தம் யுத்தக் குற்றங்களை மூடிமறைக்க முற்பட்ட அன்றைய மகிந்த அரசாங்கம் முதலில் செய்த தவறு நெற்றியில் வெடிவாங்கிய தலைவரின் காயத்தை தைத்தது. தையலின் பின் தலைவரின் முகம் போய் அது வேறு யாரோ போலிருந்தது.
2009 இறுதியுத்த காலததில் தலைவரின் காயப்பட்ட தலையை தைக்கும் வீடியோக்கள் முதலில் வெளிவந்தன. ஆதாரமான உண்மையான வீடியோக்கள். அப்போதுதான் தலைவர் நெற்றியில் கோடாலியால் தாக்கப்பட்டு இறந்தார் என்கிற வதந்திகளும் பரவின. பயந்து கவரப்பட்ட மகிந்த அரசாங்கம் பிறகு வேறொரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தது. தைத்த தலைவரின் தலையை ஒரு கைக்குட்டையால் மறைத்தது. அப்போது தலைவரின் உண்மை முகம் தெரிந்தது. உலகத்து நியாயவான்கள் இறந்தது தலைவரே என்ற உண்மையை ஐயம் திரிபு அற ஏற்றுக்கொண்டார்கள். Game Over.
தொடர்பான கட்டுரைகள்
1. ஈழப்போரின் இறுதிக் காட்சிகள்
2. நிலாந்தனின் Post War வாக்குமூலம்
Comments
Post a Comment