சுவஸ்திகா: அர்த்தமும் அபத்தமும்

 


By நட்சத்திரன் செவ்விந்தியன்

  "Prabhakaran was a Textbook Fascist"                         - The Economist

சுவஸ்திகா: கடந்த 4 வாரங்களாக சமூக வலைத்தளங்களில் “றெண்டிங்” ஆகிக்கொண்டிருக்கும் பெயர். மூன்று வாரங்களுக்கு முதல் அவர் புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பு என்று பேசியதிலிருந்து இவ்வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டபீடம் ஒழுங்கு செய்த அவருடைய பேச்சு “கலைப்பீட மாணவர்களின் எதிர்ப்பு” காரணமாக கைவிடப்பட்டது வரை நல்லதுக்கும் கெட்டதற்குமாக அவர் சமூக ஊடகங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறார். அவருக்கு எதிர்ப்பான கண்டனப் பதிவுகளே அதிகம் வந்தாலும் நியாயம் அவர் பக்கமிருப்பதால் அவர் இந்த சமூக வலைத்தள கவன ஈர்ப்பை சரியாகப் பயன்படுத்துவதற்காக பாசிஸம் என்றால் என்ன என்பதை விரிவாக விளக்குவதோடு  புலிகள் ஏன் பாசிஸ்டுகளாகிறார்கள் என்பதையும்  விரிவான ஆதாரங்களுடன் ஒரு ஆய்வுக்கட்டுரையாக எழுதியிருக்கவேண்டும். அதனை சுவஸ்திகா இன்னமும் செய்யவில்லை. 

பாசிஸம் என்ன என்று எளிமையாக விளக்குவதாயின் அது மக்களாட்சி(சனநாயகத்திற்கு) நேரெதிரான ஆட்சிமுறை என்பதிலிருந்து தொடங்கலாம். பாசிஸ ஆட்சியின் குணாதிசயங்களாக சர்வாதிகாரம், தலைவர் வழிபாடு,  அதி தீவிர குறுந்தேசியவாதம், இராணுவவாதம்(militarism) முதலியன இருக்கும். இக்குணாதிசயங்களைக் கொண்டு சமூகம், அரசியல் நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் என்பவற்றின் மீது பாசிசம் தன் இரும்புப் பிடியை வைத்திருக்கும். தகவல் பரிமாற்றம்(ஊடகத்துறை), உற்பத்தி உறவுகள், பொருளாதாரம், சந்தை முதலியவற்றையும் அது இரும்புப் பிடியால் கட்டுப்படுத்தும்.  எதிர்க் கட்சியோ எதிர்க் கட்சிகளோ பத்திரிகை சுதந்திரமோ முற்றாக நசுக்கப்படும். பாசிஸ ஆட்சியின் பிரச்சாரங்கள் மூலமும் இரகசிய பொலிஸ்(புலிகள் விடயத்தில் புலனாய்வுப் பிரிவு) மூலமும் மக்கள் மீதான பூரண கட்டுப்பாடு பேணப்படும். 

ஆக புலிகள் 1986 ஏப்ரலில்  சகபோராளி இயக்கமான ரெலோவை அழித்ததிலிருந்து 2009ல் அழிவதுவரை செய்தது இதனைத்தான். பாசிஸ ஆட்சி.  

Walter Laqueur, the author of this book(1997) described the LTTE as “preaching a fanaticism and a ruthlessness that in Europe could be found only in the fascist movements of the 1930s.”


புலிகள் பாசிஸ்டுகள் என்பது அவர்கள் வாழ்ந்த வரலாற்றுக் காலத்திலேயே நிறுவப்பட்டிருக்கிறது. முறிந்த பனை நூலில் தொடங்கிய அம்முயற்சி அதன் தொடர்ச்சியாக மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம்(Uthr.org) வெளியிட்ட ஒவ்வொரு அறிக்கைகளிலும் நூல்களிலும் ஐயந்திரிபற விலாவாரியான தரவுகளுடனும் வலுவான தருக்கங்களுடனும் நிறுவப்பட்டுள்ளது. 

உண்மையில் புலிகள் பாசிஸ்டுகளா இல்லையா என்ற விவாதம் 2009ல் புலிகள் அழிந்த கையோடு தமிழில் செய்யப்பட்டிருக்க வேண்டிய தேசியச் சடங்கு. துரதிஸ்டவசமாக பாசிஸப் புலிகள் தாம் பலமாக இருந்து ஈழத்தமிழ்ச்சமூகத்தை அழித்த காலத்தில்  நம்மிடமிருந்த பல திறமையான தமிழ் பத்திரிகையாளர்கள், சமூக விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்களின் மனச்சாட்சியையும் விலைக்கு வாங்கி தம் பாசிஸ ஊதுகுழல்களாக்கிவிட்டார்கள். இப்படி சோரம்போனவர்களுக்கு உதாரணம்  “பேராசிரியர்” கா.சிவத்தம்பி, கவிஞரும் அக்கடமிக்குமான சேரன், பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம். பத்திரிகையாளர் ஆ.சிவனேசச் செல்வன்.

                 Duty of care????                                கடமை தவறிய கனவான்கள்    சிவத்தம்பி, தனபாலசிங்கம், சேரன்


முதுபெரும் பத்திரிகையாளரான வீ. தனபாலசிங்கம் 2009இன் பின் தான் பிரதம ஆசிரியராக இருந்த தினக்குரலிலோ வீரகேசரியிலோ புலிகள் பாசிஸ்டுகள் என்ற ஆசிரியர் தலையங்கத்தை  எழுதியிருக்கலாம். எழுதவில்லை. கா. சிவத்தம்பி புலிகள் அழிந்து இரண்டு ஆண்டுகள் பின் இறந்தபோது தனக்கும் புலிகளுக்குமான கொடுக்கல் வாங்கல் ரகசியங்களையும் தன்னோடு சுடலைக்கு கொண்டு சென்றார்.

கவிஞர் சேரன். அவரது மொத்த குடும்பமும் நண்பர்களுமே புலிகளின் பாசிஸ ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள். சேரனின் தங்கை ஔவை NLFT மகளிர் அணியிலிருந்தவர். ஔவையின் கணவர் எஸ்.கே . விக்னேஸ்வரன் NLFT/PLFT தலைவர்களில் ஒருவர். இருவரையுமே புலிகள் கொல்லத்துரத்தியபோது கொழும்புக்குத் தப்பிவந்தவர்கள். விக்னேஸ்வரனின் ஒரு சகோதரரை புலிகள் கடத்திக்  கொன்றார்கள். மாற்று இயக்கங்களிலிருந்த சேரனின் பல நண்பர்களை புலிகள் கொன்றார்கள். பெண்கவி செல்வியைப் புலிகள் கடத்திக் கொன்றார்கள். கவி சிவரமணியின் தற்கொலைக்கு புலிகள் காரணமானார்கள். சேரனே புலிகளின் கொலைப் பட்டியலிலிருந்தவர். 

ஆனானப்பட்ட சேரனே 2000ம் ஆண்டு புலிகளிடம் சோரம் போனார். அதுவரையும் புலிகளை விமர்சித்துவந்த கவிஞன் என்கிற தன் தலைப்பாகையை கோவணமாகக் கட்டிக்கொண்டு. புலிகள் அழிந்தபின் அவரால் எப்படி தன் கோவணத்தைக் கழற்றி புலிகள் பாசிஸ்டுகளே என்று சொல்லமுடியும்? 

தமிழில் புலிகள் பாசிஸ்டுகள் என்ற நிறுவல்கள் மிகக்குறைவாகவே வந்தாலும் ஆங்கிலத்தில் பலரால் எழுதப்பட்டுள்ளது. ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், தயான் ஜெயதிலக முதலிய பலர் எழுதியுள்ளனர். தமிழில் அரிதாக  தமிழக ஆய்வாளர் அ.மார்க்ஸ் மட்டுமே புலிகள் பாசிஸ்டுகள் என்று எழுதியதே என் அறிவுக்கெட்டியவரையில் இருக்கிறது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி புலிகள் பாசிஸ்டுகள் என்று பகிரங்கமாக எழுதினாரோ தெரியாது. ஆனால் அவரை முதலும் கடைசியுமாக நான் 2000ம் ஆண்டில் சென்னையில் சந்தித்தபோது “ பிரபாகரன் ஒரு பாசிஸ்ட். யார் கேட்டாலும் பிரபாகரன் ஒரு பாசிஸ்ட் என்று எழுதி  கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன்” என்று என்னிடம் சொன்னார். 

                  "புலிகள் பாசிஸ்டுகள்"                    சு.ராமசாமி, மார்க்ஸ் அந்தோனிசாமி     'பார்ப்பனரரும்' பார்ப்பன எதிரியும்                         இணையும் புள்ளி


ஆக இந்த புலிகள் பாசிஸ்டுகள் என்கிற விவாதம்  இப்போது "சிறுமியான" சுவாஸ்திகாவின் தலையில் கட்டப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் சக்கரவியூகத்தை உடைத்துப்போராட போன  அர்ஜூனன் மகன் அபிமன்யு போல சுவாஸ்திகா.

                

           பத்ம வியூகம் vs பாசிசம்                           அபிமன்யு, சுவஸ்திகா


யார் இந்த சுவாஸ்திகா?

சுவாஸ்திகா பல்கலைக்கழகமொன்றில் சட்டமாணிப்படிப்பு படித்தவரல்ல. இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து சட்டத்தரணியானவர். சுவஸ்திகா ஒரு UK பல்கலைக்கழக புலமைப்பரிசு பெற்று இங்கிலாந்து செல்கிறபோதே நிர்மலா ராஜசிங்கம் +ராகவன் தம்பதியரின் ஆளுகைக்குள் வருகிறார். இதுதான் அவரின் பலமும் பலவீனமும். 

ஈழப்போருக்குப் பின்னைய ஈழவரலாற்றில் நிர்மலா ராகவன் தம்பதியர் பற்றி நிறையக் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பல நியாயமான குற்றச்சாட்டுக்கள் உண்டு. 

1. 2009ல் புலிகள் அழிந்தபின் தம்பதியர்கள் புலிகளோடான தம் தன் வரலாறுகளை இன்றுவரை எழுதவில்லை

2. நிர்மலா தன் சகோதரியான ராஜினி திராணகம வேறு சிலரோடு சேர்ந்து எழுதிய புத்தகமான முறிந்த பனையினையும் கொல்லப்பட்ட தன் சகோதரியையும் வைத்து அநியாயத்துக்கு புகழ் தேடுகிறார். 

3. நியாயமாக சுயாதீனமாகச் சிந்திக்கிற இளந்தலைமுறையினரை உருவாக்குவதைவிட தம் கட்டுப்பாட்டிலிருக்கிற தம் புகழ் பாடுகிறவர்களை கருத்தியல் சலவை செய்து(indoctrination) உருவாக்குகிறார். 

சுவஸ்திகா நிர்மலா ராஜசிங்கத்திடம் உத்தரவு கேட்டு இயங்கியதற்கு ஆதாரம் நம்மிடமுண்டு. 2021ம் ஆண்டு ஈழத்தில் புதிய ஜனநாயகக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சிலிருந்த  ஒரு முன்னணி உறுப்பினரான மு.மயூரன் என்பவரை சமகால Me Too இயக்க குற்றச்சாட்டு அடிப்படையில் தான் சார்ந்த கட்சியிலிருந்து விலக்கும் ஒரு போராட்டத்தில் இறங்கினார். சுவஸ்திகாவே Prosecutor ஆக பாதிக்கப்பட்ட பெண்களிடம் சாட்சியங்களை சேர்த்து கட்சியில் வழக்கை தாக்கல் செய்தார். கட்சிக்கு வேறு வழியிருக்கவில்லை. மு. மயூரனை கடசி தற்காலிகமாக கட்சியிலிருந்து விலக்கியது. 

இவ்வழக்கு சம்பந்தமாக விலாவாரியாக  பெண்கள் தரப்பிலுள்ள நியாயங்களை விளக்கி எழுதி வந்த  கட்டுரை நான் எழுதியது. மு.மயூரனின் நண்பர்களான போலிப்பெண்ணியவாதியான சர்மிளா சையத்தும் ஹரி ராசலட்சுமியும் சமூக வலைத்தளங்களில் மயூரனை நியாயப்படுத்தி எழுதி இவ்வழக்கை உடைக்க முயன்றார்கள். நான் இவர்களின் போலித்தர்க்கங்களை அம்பலப்படுத்தி மேலும் இரு கட்டுரைகள் எழுதினேன். அம்பலப்பட்ட சர்மிளா சையித் குத்துக்கரணமடித்தார். ஹரி ராசலட்சுமி தான் எழுதியவற்றை அழித்துவிட்டு ஓடினார். 

எனது கட்டுரையால் சுவஸ்திக்காவும் பாதிக்கப்பட்ட பெண்களும் பயன்பெற்றார்கள். ஆனால் அவர்கள் யாருமே எனது கட்டுரையை சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை. தனிப்பட்ட உரையாடல்களில் சில பெண்கள் எனது கட்டுரையை பகிரக்கூடாது என்று சுவஸ்திக்கா தம்மிடம் உத்தரவிட்டிருப்பதான உண்மையைச் சொன்னார்கள். சுவஸ்திக்கா இவ்விதம் செய்வதற்கு காரணம் நிர்மலா ராஜசிங்கத்தின் அழுத்தம் தான். என் மீதான காழ்ப்பில் என்னைப்பற்றி போலி அவதூறுகளைச் சொல்லி சுவஸ்திக்காவை இவ்விதம் செயலாற்றச் செய்தவர் நிர்மலா ராஜசிங்கம்தான். 

சுவஸ்திகா அருளிங்கம் அநியாயத்திற்கு நிர்மலா ராஜசிங்கம் ராகவன் குழுமத்தின் கருத்தியல் சலவை – Indoctrination ஆளுகைக்குள் இருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரம் இது. 

“The LTTE maintained a fascist, totalitarian control over the civilian population with a network of prisons for dissidents and enemies who were killed or tortured and a strict pass system that did not allow people under their control to leave.”   

      - Dr. Daya Somasundaram


சுவஸ்திக்கா வளரவேண்டும். தான் ஒரு சுய சிந்தனையாளர் என்பதை இனி திறந்த மனத்தோடு வந்து நிருபிக்கவேண்டும்.  பாசிச புலி ஆதரவாளர்களிடம் கருத்து சுதந்திர உரிமை கேட்கும் சுவஸ்திகா எவ்வாறு சக பெண்களிடம் என் கட்டுரையை சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடாது என கட்டளையிடுவதும் ஒரு கருத்து சுதந்திர மறுப்பே என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அறிவையும் கருத்து சுதந்திரத்தையும் அவை செல்லும் வழிகளை அடைக்க முயலும் நிர்மலா ராஜசிங்கத்தின் செயற்பாடும் ஒரு பாசிச நடைமுறையே என்பதை உணர்ந்து தெளியவேண்டும். 

சுவஸ்திகாவுக்கு  மட்டுமல்ல சுவஸ்திக்காவின் எதிரணியிலிருக்கும் சட்டத்தரணி குருபரன் குமாரவடிவேலுக்கும் இருக்கும் பிரச்சனை ஒன்றுதான். சுய சிந்தனையாளர்களான புலமையாளர்களாக வருவதிலுள்ள சிக்கல்கள். ஒருவர் சுயசிந்தனையுள்ள புலமையாளராகவேண்டுமாயின் குறித்த விடயம் சம்பந்தமான(இங்கே பாசிசமும் புலிகளின் வரலாறும்) ஆழமாகக் கற்றுப் பெற்ற ஆராய்ச்சியும் அதனை தெளிவான தருக்கமான  மொழியில் வெளிப்படுத்தக் கூடிய இயல்பும்(Erudition and Articulateness) கைவரப்பெற்றவராக இருக்கவேண்டும். இந்த இரண்டிலுமே முழுமையான பயிற்சி இல்லாமல் சுவஸ்திக்கா திண்டாடுவது செப்டம்பர் 20ம் திகதி அவர் திலீபன் நினைவேந்தல் சம்பந்தமாக தன் முகநூலில் போட்ட பதிவில் தெரிய வந்தது.

 ஈழத்தில் சுதந்திரத்திற்கு பிற்பட்ட சுயபாசைக் கல்விக்கொள்கைக் காலத்தில் பல்கலைக்கழகங்களின் புலமை ஆய்வுகளின் தரம் தாழ்ந்தது. இதனை நீங்கள் தப்பாக விளங்கிக் கொள்ளக்கூடாது. நான் தீவிரமான சுயபாசைக் கல்விக் கொள்கை (பண்டாரநாயக்க)ஆதரவாளன். பாலர் வகுப்பு முதல் க.பொ.த உயர்தரம் வரை பாடசாலைக்கல்வி ஊடக மொழியாக ஈழத்தில் தமிழோ சிங்களமோ மட்டுமே இருக்கவேண்டும் என்பதே என் கொள்கை. இவ்விடயத்தில் சிங்கப்பூர் மாடலுக்கு நான் பரம எதிரி. ஆனால் பல்கலைக்கழகங்களில் ஆங்கில ஊடகத்தில் படிக்கும் தெரிவு இருக்கவேண்டியதோடு இதற்கு தயார்ப்படுத்த பாடசாலைக்காலத்தில் ஆங்கிலப்பாடத்தில் மாணவர்கள் தேறக்கூடியதற்கு நாம் அதிகளவில் முதலிடவேண்டும். சுதந்திற்கு பிற்பட்ட காலத்தில் நாம் இதனைச் செய்யவில்லை. 

அந்தக்கால சட்டத்தரணிகளான நீலன் திருச்செல்வத்தினதும் லக்ஸ்மன் கதிர்காமரதும் புலமை இந்தக்கால சுவஸ்திக்காவிடமும் குருபரனிடமுமில்லை. குருபரனின் தன் பள்ளிக்காலத்தில் தான் ஆகர்சிக்கப்பட்ட புலிப்பாசிச பொன்வண்ணப் பிரச்சாரங்களின் கைதி. சுவஸ்திக்கா தான் லண்டன் சீமையில் படிக்கப்போனபோது நிர்மலா ராகவன் குழுமத்திடம் மாட்டுப்பட்ட கைதி.

சுவஸ்திகா தான் யார் என்பதை நிறுவவேண்டிய தருணம் இது. சுவஸ்திகா வெறுமனே ஒரு அக்டிவிஸ்ரா? தொழிற்சங்க போராளியா? அல்லது ஒரு சுய  சிந்தனையாளரா? அவர் சுய சிந்தனையாளரெனின் புலிகள் ஏன் பாசிஸ்டுகள் என்பதை எழுத்தில் தர்க்கரீதியாக தரவுகளுடன் வைக்கவேண்டும்.

"ஹிட்லரின் இராணுவ ஒழுங்கு முறைகளாலும் இராணுவ வெற்றிகளாலும் ஆளுமை செலுத்தப்பட்டிருந்த பிரபாகரன், ஜேர்மனிய இராணுவத்தின் ஒழுங்கு முறைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சிகளில் புகுத்த முற்படுகிறார். ஹிட்லரின் இராணுவம் கட்டுக்கோப்பானதாகவும் உறுதியானதாகவும் அமைந்திருந்தமையால் மட்டும் தான் வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்கிறது என்று கூறுகிறார். இராணுப் பயிற்சி ஒழுங்குமுறையின் முதல் பகுதியாக பயிற்றப்படுகின்ற அனைவரும் ஹிட்லரின் இராணுவம் போல அதே முறையில் சலூயுட் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஹிட்லரின் இராணுவத்தின் ஒழுங்குமுறையையும் கட்டுக்கோப்பையும் மிகவும் மதித்திருந்த பிரபாகரன் அதன் தமிழீழப் பிரதியாக விடுதலைப் புலிகளின் இராணுவம் அமைந்திருக்க வேண்டும் என்று விருப்பியிருந்தார். இவ்வேளையில் தான் முதல் தடவையாக பிரபாகரனுக்கு எதிரான எதிர்ப்பலைகள் தோன்றுகின்றன. சில உறுப்பினர்கள் ஹிட்லரின் சலூயுட் முறை என்பது தேவையற்றது என வாதிட்டனர். பிரபாகரன் அவர்களுக்கு எதிராக வாதிடுகிறார். கட்டுக்கோப்பான இராணுவம் அமைய வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளும் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். அதன் ஆரம்பமே இந்த ஹிட்லர் முறை என்று வாதிடுகிறார்.  இறுதியில் பிரபாகரன் முன்வைத்த அடிப்படையில் ஹிட்லர் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது"                                                         - கணேசன் ஐயர்                                                           (ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்)



ஆனால் சுவஸ்திக்காவின் புலிகள் பாசிஸ்டுகள் என்ற கூற்றில் ஞாயமிருக்கிறது. அதனை அவர் தன் சொந்த சரக்கால், சொந்த ஆராச்சியால்  நிருபிக்க வேண்டும். நிர்மலா ராகவன் குழுமத்தின் நிழலில் தங்கியிருந்து  குளிர்காயக்கூடாது. 

புலிகள் பாசிஸ்டுகள் என நிருபிக்க சுவாஸ்திகா எழுதவேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைக்கு நாம் வழங்கும் ஆய்வு மூலப் பட்டியல் 

 1. UTHR(J) இணையம்

2. The Arrogance of  Power by Rajan Hoole

3. Broken Palmyrah

4. Palmyrah Fallen by Rajan Hoole

5. Scarred Minds by Daya Somasundaram

6. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(கணேசன் ஐயர்)

7. ஈழத்தின் வலி(Prof. மகேஸ்வரன் உமாகாந்)

8. புலிகளின் வதைமுகாம் பற்றி Arulbert Julian எழுதிய வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகள் 

9. தேனி இணையத்தில் புலிகளின் வதைமுகாம் பற்றி மணியம் எழுதிய நீண்ட தொடர்

10. வேட்கை( பிள்ளையானின் தன்வரலாற்று நூல்) 

11. ஒரு குறுவாளின் நிழலில்( தமிழினி)


தொடர்பான கட்டுரைகள்


Comments

Post a Comment

Popular posts from this blog

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்