'செற்றப் செல்லப்பா' ராகவன் துகிலுரி படலம்

      ராகவன்: பகலில் ரெலக்ஸ் பாண்டியன்                                           இரவில் Set up செல்லப்பா             


 மீ ரூ பெண்டிர் புரட்சிகளை, போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்யும் நோக்கோடு Chinniah Rajeshkumar ஆகிய ராகவன் ஒரு கட்டுரையை அரங்கம் இதழில் எழுதியுள்ளார். கெட்டித்தனமாக பெண்களுக்கு நியாயமாக இருப்பதான பாவனையோடு இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் அவரது உண்மையான நோக்கம் பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை சமூகத்தில் இயல்பானதாக காட்டுவதும் அதனை Normalise பண்ணுவதும் தான்.

விதை குழுமத்தின் பாலியல் சுரண்டல்கள், மோசடிகள், குற்றங்களை அம்பலப்படுத்தும் சமகால ஈழப்பெண்டிர் புரட்சியை நீர்த்துப்போகச் செய்ய நேரடியாக மோதத் திராணி இல்லாத  சோபாசக்தி தனது தரகு முகவர்களான ராகவன், ஹரி ராசலெட்சுமி, தர்மு பிரசாத், கருணாகரன் சிவராசா ஆகியோரை ஏவி விட்டு ஆழம் பார்க்கிறான். 

மீ ரூ ஈழப்பெண்டிர் புரட்சியின் தார்மீக உக்கிரம் அறியாத சோபாசக்தியின் "ஒட்டுக்குழு" கூலிப்படை அணிகளான ராகவன் முதலிய அணிகள் செமையாக பெண்கள் அணிகளிடமிருந்து வாங்கிக்கட்டத் தொடங்கியுள்ளன. சோபா சக்தியின் பிரதம Public Relations ஏஜண்டான ராகவனின் 'படையணி 'அரங்கம் vs அபத்தம்' சமரில் (சிவா) மாலதி படையணியிடம்  படுதோல்வி. தளபதி ராகவனே பலத்த காயமடைந்து இப்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவனுகளின் 'தேசியத் தலைவன்' தன் மீசையில் மண் ஒட்டவில்லையே என்று இப்போது ஒஸ்றேலியாவுக்கு நாடகம் ஆட ஓடிவிட்டான்.

பின்வருவது ராகவன் அரங்கம் இதழில் ராகவன் சோபாசக்தியின் லாபியிஸ்டாக இரண்டாம் ஈழப்பெண்டிர் புரட்சியை(விதை குழுமம்) நீர்த்துப் போகச்செய்யும் தெளிவான அஜெண்டாவுடன் எழுதிய கட்டுரைக்கு சிவா மாலதி அபத்தம் இதழில்  எழுதிய  மிகச் சிறப்பான பதில் கட்டுரை. முதல் முறையாக  மிக அரிதாக(Or one and only) ஈழத்தில்  சுயாதீனமாக ஆராய்ச்சி செய்து மிகத் தெளிவாக  தமிழில் எழுதக்கூடிய ஒரு (90s kid) பெண்ணியல்வாத ஆய்வாளராக சிவா மாலதியை Jaffnafashion ஆசிரியர் குழு இனங்காணுகிறது. இத்தனைக்கும் சிவா மாலதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ர்ந்தவர். இவரது சமகாலத்தில் இவரது திறமைகளுடைய ஒரு வடமாகாண  பெண்ணிய ஆய்வாளர் ஒருவர் நமது ராடாரில் இன்னமும் அகப்படவில்லை.                                                          - பிரதம ஆசிரியர்

 பாலியல் சுரண்டல்காரர்களை           பிணையெடுக்கும் ராகவன்

By சிவா மாலதி

அரங்கம் பத்திரிகையில் ஏப்ரல் 12 அன்று பிரசுரிக்கப்பட்ட பாலியல் சுரண்டல் - ஒரு பார்வை எனும் ராகவனின் கட்டுரைக்குப் பதிலளிக்கும்முகமாக, Heterosexual (ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பாலியல் நாட்டம்) உறவுகளை மையப்படுத்தி எழுதப்பட்ட பதில். 

மேற்குறித்த கட்டுரையினை முழுதாக வாசித்த நாளிலிருந்து அதற்குப் பதில் எழுதவேண்டும் எனும் எண்ணம் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. அக்கட்டுரையின் நோக்கம் என்னவென்பது திரு. ராகவனுக்குத் தெரியுமளவிற்கு, அதனை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும்கூட அது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. புத்திசாலித்தனமெனக் கருதி தெளிவாகவும், வெளிப்படையாகவும் பாலியல் சுரண்டல் தொடர்பான குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பிணையெடுப்பதுடன், கிரிசாந்தினுடைய கட்டுரைகளின் தொடர்ச்சியான இக்கட்டுரை, பாலியல் சுரண்டல்காரர்களுக்குப் பரிந்துபேசுவதனை மற்றுமொரு தளத்திற்குக் கொண்டுசெல்கின்றது. இக்கட்டுரைக்கு எதிராக எழக்கூடிய விமர்சனங்களை கட்டுப்படுத்துவற்கு எவ்வளவுதான் முன்னாயத்தங்களுடன் கட்டுரை எழுதப்பட்டிருந்தாலுங்கூட அத்தகைய முன்னாயத்தங்கள் இக்கட்டுரையின் அபத்தங்களிலிருந்து கட்டுரையாளரை மீட்பதற்குப் போதுமானதாயில்லை. 

பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் பேசுபவர்கள், பெண்கள் பல ஆண்களுடன் உறவுகொள்வதையோ, ஆண்கள் பல பெண்களுடன் உறவுகொள்வதையோ (Multiple relationships) கேள்விக்குட்படுத்தவில்லை,  அத்தகைய உறவுகளில் இருப்பதென்பது அவரவர் பாலியல்பு(Sexuality), பாலியல் உரிமை மற்றும் தெரிவுடன் தொடர்புபட்டது. அத்தகைய உறவில் ஈடுபடும் தரப்பினர் தமக்குள் அவ்வுறவு/கள் தொடர்பில் வெளிப்படையாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் இருக்கவேண்டியது அத்தகைய உறவுகளின் அடிப்படையாகும். அவ்வாறல்லாமல் பலருடனான உறவை தமது இணைகளுக்கு/காதலருக்கு மறைத்து, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை உறவிலிருக்கும் ஒவ்வொருவரிடமும் கூறி பொய் பித்தலாட்டங்கள் செய்து பெண்களை தமது பாலியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதையே சுரண்டல் என்கிறோம். இவ்வாறு, பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது பாலியல்பு, பாலியல் உரிமை, தெரிவு என்பன மறுக்கப்படுவதோடு அநீதியும் இழைக்கப்படுகிறது என்கின்ற புரிதலின் அடிப்படையிலேதான் பாலியல் சுரண்டல்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் ராகவன் பாலியல் ஒழுக்கம் தொடர்பில் சமூகப் பொதுப்புத்தியில் நிலவும் கருத்துக்களை அப்பட்டமான சுரண்டல்கள் பற்றிய வெளிப்படுத்தல்களுடன் முடிச்சுப்போடுவதன் மூலமும் பெண்ணியவாதிகளுக்கு ‘கலாசார காவலர்கள்’ சாயம் பூசுவதன் மூலமும் சுரண்டல்களையும் திட்டமிட்ட பாலியல் சுரண்டல்களையும் தனிமனித ‘ஒழுக்கவாதமாக’ மடைமாற்றப் பார்க்கிறார்.

" ஒரு குறிப்பிட்ட சமூகக் கட்டமைப்பில் பாலியல் உறவு சம்பந்தமான உரையாடல்களின் (discourse) திரட்சியால் எழுந்த கருத்தியல் பரிமாணத்தை கொண்டே பாலியல் உறவுகள் பற்றிய பார்வை எம்மிடம் உள்மனக்கிடக்கையில் இருந்து எழுகிறது. இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனை முறையை கேள்விக்குட்படுத்தா விட்டால் நமது பார்வை ஒரு குறிப்பிட்ட ஒழுக்க நெறி என்ற வரையறைக்குள் சிக்கிக்கொள்ளும்"                      - ராகவன்

பாலியல் சுரண்டல் தொடர்பில் வெளிப்படுத்துபவர்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்துவாழும் குடும்ப அமைப்பினை ஒழுங்கான ஒழுக்கமான அமைப்புமுறையாகக் கருதுவதனால் அதிலிருந்து வேறுபட்ட உறவுகளை. குறிப்பாக Multiple relationships போன்ற உறவுகளை ஒழுக்கம்சார்ந்த கண்ணோட்டத்தினூடாக அணுகுவதனால் அதனை பாலியல் சுரண்டல் என்பதாக தவறானமுறையில் வியாக்கியானம் செய்கின்றனரா எனக்கேள்வியெழுப்பப்படுகின்றது, அதற்குப் பதில் மிகவும் தெட்டத்தெளிவானது. ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தில் பாலியல் சுரண்டல்கள் எனும் பதம் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, பாலியல் சுரண்டல் என்றால் என்ன எனும் தெளிவுடனும், புரிதலுடனுமே அவ்வெளிப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்துவாழும் குடும்பமுறையினைத் தேர்வுசெய்திருப்பவர்கள் அனைவருமே அதனை ஒழுக்கவாதஃபழமைவாத அடிப்படையில் எடுத்தவர்கள் என்பது அபத்தமானது. பாலியல்புசார்ந்த தேர்வாக ஏற்றுக்கொண்ட இருவருக்குமான குடும்பஃஅமைப்புமுறையாக அது இருக்கலாம் இல்லையா? இத்தகைய முற்போக்குபேசும் கட்டுரையாளர் உட்பட பாலியல் சுரண்டல்வாதிகள்வரை அத்தகையதோர் அமைப்புமுறையினைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையினை நடாத்துகின்றார்கள். அது ஒழுக்கவாதத்தினடிப்படையிலா?  

பல பெண்களுடன் உறவில்(Multiple relationships) இருக்கும்போது அப்பெண்களுக்கு அவ்வுறவுகளை (Relationship) ஆரம்பிக்க முன்னரோ அல்லது அவ்வுறவில் இருக்கும்போதோ தான் Multiple relationshipsஇல் இருப்பதையும், அது தமது பாலியல்புசார் தெரிவு என்பதையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை, அதனூடாக தம்முடன் உறவிலிருந்த பெண்களது பாலியல்பு, பாலியல் உரிமை மற்றும் தெரிவினை மீறியது மட்டுமல்லாமல், அப்பெண்களை உறவிற்குள் கொண்டுவருவதற்கு பாலியல் Grooming செய்வது, அவர்கள் கேள்விகேட்கும் போதெல்லாம் தந்திரமானமுறையில் முன்னுக்குப்பின் முரணான, பொய்யான தகவல்களைக்கூறி அவர்களை சமாளித்து தொடர்ந்தும் உறவில் தக்கவைத்துக்கொள்வது, அதனூடக அப்பெண்கள்மீதான பாலியல் சுரண்டலினை மேற்கொள்வது, குறிப்பாக நலிவுற்றநிலையிலுள்ள பெண்களை இலக்காகக்கொண்டு இவற்றை மேற்கொள்வது போன்ற பல அடுக்குகள் பாலியல் சுரண்டல் எனும் பதத்திற்குள்ளும், இவ்வெளிப்பாடுகளுக்குள்ளும் பொதிந்திருக்கின்றன.

" ரோம சாம்ராஜ்ய காலகட்டத்தில் பாலியல் உறவு என்பது வெளிப்படையானதாகவும் ஓரளவு பாலியல் சுதந்திரம் கொண்டதாகவும் இருந்தது"                                - ராகவன்

என ராகவனின் கட்டுரையில் சுட்டிக்காட்டப்படுகின்றது. நாமும் பாலியல் உறவுகள்/பாலியல்பு தொடர்பான வெளிப்படைத்தன்மையினையே கோருகின்றோம், அதனூடாக பாலியல் சுரண்டல்களை ஓரளவுக்கேனும் மட்டுப்படுத்த வாய்ப்பிருப்பதுடன், அத்தகைய உறவுகளில் இருப்பதற்கான தெரிவு உறவில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் இருக்கும். தற்போது பேசப்படும் பாலியல் சுரண்டல்களானவை, வெளிப்படைத்தன்மையற்ற முறையில், திரிவுபடுத்தப்பட்ட தகவல்களையும் தம்மைப்பற்றிய போலியான விம்பத்தினையும் உண்மையென நம்பச்செய்து உறவினை ஏற்படுத்தி, அதனைப் பேணியதுடன், தேவை முடிந்ததும் நுட்பமாக கழற்றிவிட்;டமை போன்றவற்றினையே பேசவிழைகின்றன.

பாலியல் சுரண்டல்கள் தொடர்பான வெளிப்பாடுகளின் பின் பாலியல் சுதந்திரம் தொடர்பில் பெருமளவு பேசப்படுகின்றது. ஆனால் அவையனைத்தும் ஆண்களது கண்ணோட்டத்தில் தமது நலனை மையப்படுத்திய உரையாடல்களாக இருக்கின்றதேயன்றி, எவ்விதத்திலும் பெண்விடுதலைக்கும், பால்நிலை சமத்துவத்திற்கும், பெண்களது பாலியல் சுதந்திரத்திற்கும் அவற்றால் பயனேதுமில்லை. பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் என்பது பெண்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். ஆணாதிக்கமனநிலையில் அல்லது பெண்களைப் பாலியல்ரீதியாகச் சுரண்டுவதனை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் பரிந்துரையாக இல்லாமல், பெண்களுக்கான பாலியல் சுதந்திரமென்பது அவர்களுடைய பாலியல்பு, பாலியல் உரிமை மற்றும் தெரிவுபற்றிய புரிதலின் அடிப்படையில் பெண்களாலேயே மேற்கொள்ளப்படவேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் பாலியல் சுதந்திரம் என்ன அர்த்தத்தினைக் கொடுக்கின்றது என்பதையும், அதனைப் பொறுப்புணர்ச்சியுடன் தாம் எவ்வாறு அனுபவிக்கவிரும்புகின்றனர் என்பதையும் அவர்களே தீர்மானிக்க வேண்டும். மத்தியதரவர்க்கப் பெண்களுக்கே பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு ஓரளவிற்கு சாத்தியமாகியுள்ளதுபோல பாலியல் சுதந்திரம் தொடர்பான உரையாடல்களும் மத்தியதரவர்க்கப் பெண்களுக்கு ஓரளவிற்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கின்றது. சமூகத்தின் விளிம்புநிலையிலிருக்கும் அடித்தட்டுவர்க்கப் பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் என்பது இன்றும் பேசுபொருளாகவில்லை. அதனைச் சாத்தியப்படுத்துவதற்கு, புற சமூக, பொருளாதாரச் சூழல்களிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்படவில்லை. 

அதுதவிர, பெண்கள் பண்டமாகப் பார்க்கப்படும் சமூகத்தில் பரஸ்பர சம்மதத்துடன் பாலியலுறவில் ஈடுபடும் அநேக சந்தர்ப்பங்களில் (குறிப்பாக திருமண உறவுகள் தவிர்ந்த ஏனைய உறவுகளில்), உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவருமே பாலியல் இன்பத்தினை அனுபவித்தாலும்கூட ஆணாதிக்க மனநிலையில் ஆண்கள் தாமே பெண்களை அனுபவித்துவிட்டதாக தமது நண்பர்களிடம்கூறி தம்பட்டமடிப்பதும் அதன்விளைவாக பெண்கள் சமூகத்தில் மேலும் நலிவுற்றநிலைக்குத் தள்ளப்படுவதும், பாதுகாப்புசார்ந்த மற்றும் வேறுபல பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பதும் எமது அன்றாடமாக இருக்கின்ற நிலையில்தான் நாங்கள் வாழ்கின்றோம்.  இத்தகைய சந்தர்ப்பங்களில் தாம் அனுபவித்த பெண்களின் எண்ணிக்கையில் ஒன்றைக்கூட்டியபடி ஆண்கள் அடுத்த பெண்ணைநோக்கி நகரும் நிலைதான் இன்றும் உள்ளது. இதனூடாக நாம் குறிப்பிட்டுச்சொல்ல விரும்புவது, பெரும்பாலும் சமூகத்திலுள்ள ஆண்களுக்கு தாம் உறவுகொள்ளும் பெண்கள் வெறும் எண்ணிக்கைகள்தான். இத்தகைய சமூகச்சூழலில் தன்னுடைய  சுயமரியாதையையும், தன்னையும் பாதுகாத்துக்கொண்டு, தன்னுடைய நலிவுற்றநிலையினை மேலும் அதிகரிக்காது, தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்தியபடி தனக்கான பாலியல் சுதந்திரத்தினை பொறுப்புடன் அனுபவிக்கவேண்டிய நிர்ப்பந்தமே பெண்களுக்கு உள்ளது.

"ஒரு தனிக்குடும்ப நடைமுறையில் பெண்கள் தமது கணவனின் உழைப்பு, உதவிகளே குழந்தை வளர்ப்புக்கான நீண்டகால முதலீடாயின"                                      - ராகவன்

தனிக்குடும்ப நடைமுறையில் பெண்களது பராமரிப்பு வேலைகளுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.  குடும்பத்திலுள்ள பராமரிப்பு வேலைகளில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில்  ஆண்களது பங்களிப்பு பொதுவாகவே மிகவும் குறைவானதாகவே இருந்துவருகின்றது. அவர்கள் அதில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில்கூட அதனைப் பெண்களுக்குச் செய்யும் உதவியாகவே கருதுவதென்பது பால்நிலைசார் பங்குபாத்திரங்களினடிப்படையிலும் (Gender roles) பால்நிலைசார் அதிகார அசமத்துவ உறவுகளினடிப்படையிலும் (Gender power relations) ஆகும். அத்துடன் இதுவே சமூகப்பொதுப்புத்தியும்கூட. ஆக, இக்கருத்தானது (கணவனின் உதவியினை குழந்தை வளர்ப்பிற்கு எதிர்பார்ப்பது) அடிப்படையில் பால்நிலை அசமத்துவத்திற்குத் துணைபோவதாயிருப்பதுடன், பால்நிலை அசமத்துவம் தொடர்பான ஒரேமாதிரியான நம்பிக்கைகளை (Stereotypes) மீளவலியுறுத்துவதாயிருக்கின்றது. பால்நிலைதொடர்பான மிகக்குறைந்தபட்ச கூருணர்வுகூட இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையினைப் பார்க்கும்போது, கட்டுரையின் முடிவில் எழுதப்பட்டிருக்கும் ‘பால்நிலை சமத்துவம் மனிதகுலத்திற்கு அவசியமாகும்’ என்கின்ற கூற்றுக்கு எந்தப்பெறுமதியும் இருப்பதாகத் தோன்றவில்லை.  

"ஆசியா, ஆபிரிக்காவில் உள்ள பல சமூகங்களில் கணவனின் பாத்திரம் தனிக்குடும்ப பாத்திரம் போல் இருக்கவில்லை. உதாரணமாக தாய் வழி கூட்டுக்குடும்ப சமூக அமைப்புகளில் பெண்கள் தமது குழந்தைகளை வளர்க்கவோ அல்லது தமது வாழ்க்கைக்கான பொருளாதாரத்தையோ கணவனிடம் எதிர்பார்க்கவில்லை. கணவன் பொதுவாக தனது தாய் சகோதரருடன் வாழ்வதும் அவர்களின் பொருளாதார தளங்களில் தனது உழைப்பை செலுத்துவதும் நிகழ்ந்தது. அத்துடன் தனது மனைவி வேறு ஆண்களுடன் தொடர்பில் இருக்கிறாரா என்ற பிரச்சனைகளும் எழுவதில்லை. அதேபோல் தனது கணவனுக்கு வேறு தொடர்புகள் இருக்கின்றதா என்று மனைவி பார்ப்பதும் இல்லை"                                               - ராகவன்

இன்று இலங்கையிலிருக்கும் சமூகஅமைப்பு தொடர்பில் நாம் யாவரும் அறிவோம். அவ்வாறிருக்க ஆசியா, ஆபிரிக்காவிலுள்ள உதாரணங்களை கட்டுரையாளர் சுட்டிக்காட்டுவதன் நோக்கம்தான் என்ன? அத்தகைய சமூகக்கட்டமைப்பு இங்கிருக்கும் சமூகச் சூழலுக்கும், பாலியல் சுரண்டல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் வெளிப்பாடுகளுக்கும் எந்தவிதத்தில் பங்களிப்புச்செய்யும்? இங்கிருக்கும் சமூகக்கட்டமைப்பில் தற்போதுள்ள நிலைமைகளில் ஆண்கள் கூறப்படுகின்ற உதாரணத்தின்வழி நடப்பதென்பது திருமணக் கட்டமைப்பிற்குள்ளும், குடும்ப அமைப்பிற்குள்ளும், அதற்கு வெளியிலும் பெண்கள்மீது பாலியல்ரீதியான சுரண்டலையும், உழைப்பு மற்றும் பொருளாதார சுரண்டலினையும் மேற்கொள்வதையும், சமூகத்தில் பெண்களது நிலையினையும் மேலும் மோசமடையச் செய்யுமேயன்றி அதனால் வேறு பயனேதுமில்லை. ஆக, சமூகநீதியினையும் சமத்துவத்தினையும் ஏற்படுத்துவதற்கு, தற்போதிருக்கும் சமூகச் சூழலுக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு என்ன செய்யலாம் என்பதற்கான முன்மாதிரிகளுடனும், உதாரணங்களுடனும் வராவிட்டாலும்கூட பெண்கள்மீதான ஒடுக்குமுறைகளையும், சுரண்டல்களையும் மேற்கொள்வதற்கான புதிய மாதிரிகளுடனும், உதாரணங்களுடனும் வருவதென்பது சுரண்டல்வாதிகளின் நடத்தைகளை சாதாரணமயப்படுத்தவும், அதனூடாக அவர்களைக் காப்பாற்ற முயல்வதுமன்றி வேறேது?

"கருத்தடை மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டதும் மேற்கு நாடுகளில் இன்னிலை மாறியது. எமது உடலை நாமே கட்டுப்படுத்துவோம். நாம் குழந்தை பெறும் இயந்திரமல்ல என்ற பதாகையில் பாலியல் சுதந்திரத்தை மேற்கத்திய  முதல் அலை பெண்ணியவாத சிந்தனைமுறை வலியுறித்தியது"                                                      - ராகவன் 

மேலுள்ளவாறு குறிப்பிடுவதானது பெண்ணிலைவாத அலைகள் தொடர்பில் இருக்கக்கூடிய அலட்சியப்போக்கினையும், தரவுப் பிழையினையும் சுட்டுகின்றது. 

“முதலாம் அலைப் பெண்ணிலைவாதம் பெண்களுக்கான வாக்குரிமை, சொத்துரிமை போன்ற சட்ட உரிமைகளுக்கான போராட்டமாகவும், இரண்டாம் அலைப் பெண்ணிலைவாதம் பெண்களுக்கான அரசியல், சமூக சம அந்தஸ்து போன்றவற்றிற்கான தொடரும் போராட்டங்களாகவும், இரண்டு பெண்ணிலைவாத அலைகள்மீதான விமர்சனத்துடனும் கட்டுடைப்பு, பாலியல் சுதந்திரம், கருக்கலைப்பிற்கான சுதந்திரம் என்பவற்றை பேசுபொருளாகக்கொண்டு நிறத்தாலும் வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான போராட்டமாக மூன்றாம் அலைப் பெண்ணிலைவாதமும் அமைந்தன” (அரசி விக்னேஸ்வரன், புதியசொல் -09) 




இதில் குறிப்பிடத்தக்கவிடயம் என்னவென்றால், தமிழ்ச்சூழலில் Me too பற்றிய அறிமுகமொன்றினைச் செய்த கட்டுரைகளிளொன்றான இக்கட்டுரையைப் பதிப்பித்த புதியசொல் மற்றும் விதை குழுமத்தின் அங்கத்தவர்களே இந்தப் பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டவர்கள் என்பது கவனத்திற் கொள்ளப்படவேண்டியதாகும். அது அவ்வாறிருக்க, பாலியல் சுதந்திரத்தினை வலியுறுத்துவது முதலாம் அலைப்பெண்ணிலைவாதம் என்பது அடிப்படையில் தவறானது. இதனைக்கருத்தில்கொள்ளும்போது, ஒரு கட்டுரையினை எழுதி அதனை வெளியிடுவதற்கு முன்னர் குறைந்தபட்ச தரவுச் சரிபார்த்தலைக்கூட முறையாகச்செய்யாமல் திரிவுபடுத்தப்பட்ட கருத்துக்களைப் பரப்புவதற்கான நோக்கமும் தேவையும் என்ன எனும் கேள்வியே மேலெழுகின்றது. இது தற்கொலை முயற்சியல்லாது வேறேது?

"பாலியல் சுரண்டல் என்ற பதத்திற்கான அர்த்தத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் சிரமங்கள் உண்டு"                              - ராகவன் 

பாலியல் சுரண்டல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பதங்கள் நன்கு வரையறுக்கப்பட்டே உள்ளன. அதனால் ஐக்கிய நாடுகள் சபையினால் பயன்படுத்தப்படுகின்ற வரைவிளக்கணத்தையும் அதற்கான இணைப்பினையும் பாலியல் சுரண்டல் என்ற சொல்லினைப் புரிந்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வோருக்காக இங்கு வழங்கியிருக்கின்றேன். இணைய இணைப்புகள் வந்தபிறகு எதையும் ஒரு சொடுக்கில் அறிந்துகொள்ளும் சூழலிருக்க பாலியல் சுரண்டல் எனும் பதத்தினை எவ்வாறு புரிந்துகொள்வதென்பது தெரியாமலே அது தொடர்பில் ஒரு கட்டுரையையே எழுதுவது பேரபத்தமென்பது ஒருபுறமிருக்க பாலியல் சுரண்டல் எனும் பதத்தினைப் புரிந்துகொள்வதிலுள்ள சிரமத்துடன் பாலியல் சுரண்டல்வாதிகளைப் பிணையெடுப்பது பிரபஞ்சமட்டத்திலான அபத்தமாகும்.

The UN defines sexual exploitation and abuse as follows:

a. Sexual exploitation is any actual or attempted abuse of a position of vulnerability, differential power, or trust, for sexual purposes, including, but not limited to, profiting monetarily, socially or politically from the sexual exploitation of another. 

b. Sexual abuse means the actual or threatened physical intrusion of a sexual nature, whether by force or under unequal or coercive conditions. 

மேலுள்ள வரைவிலக்கணத்தின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

ஐக்கிய நாடுகள் சபையானது பாலியல் சுரண்டல் மற்றும் து~;பிரயோகம் என்பவற்றினை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது.

1. பாலியல் சுரண்டல் என்பது ஒருவரின் நலிவுற்ற நிலை, அதிகாரவேறுபாடு, நம்பிக்கை போன்றவற்றினைத் துஷ்பிரயோகஞ்செய்து அவரைத் தனது பாலியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் அல்லது பயன்படுத்த முயற்சித்தல் ஆகும். இது பணரீதியான, சமூகரீதியான அல்லது அரசியல்ரீதியான ஆதாயங்களைப் பெறுவதாகவோ அல்லது வேறுவகையினதாகவோ இருக்கலாம்.  


2. பாலியல் துஷ்பிரயோகமென்பது பலவந்தமாகவோ அல்லது சமமற்ற அல்லது நிர்ப்பந்தமான நிலைமைகள்கீழ் உடலில் பாலியல்ரீதியிலான அத்துமீறலினை மேற்கொள்ளுதல் அல்லது அத்தகைய அத்துமீறலினை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தல். 

மேலுள்ள வரைவிலக்கணங்களினடிப்படையில் பார்க்கப்போனால் விதை குழுமத்தின் உறுப்பினர்கள் பாரதூரமான பாலியல் சுரண்டல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுவந்திருக்கின்றார்கள் எனக்கூறுவது மிகையாகாது. எந்தெந்த விதங்களிலெல்லாம் அவர்கள் பாலியல் சுரண்டலிலீடுபட்டார்கள் என்பதெல்லாம் பட்டியலிடுமளவிற்கு நீளக்கூடியவை.


"இருவர் தமது சுய விருப்பத்தால் இருவர் உடல் உறவில் ஈடுபடுவது அவர்களின் தேர்வு என்ற போதும் ஆழமாக பார்த்தால் சுய விருப்பம் என்பதும் பல சமயங்களில் ஆதிக்கம், அந்தஸ்து என்ற பல பரிமாணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வகையில்  அணுகும் போது  புதிய பிரச்சனைகள் எழுகின்றன"                                 - ராகவன்

தெரிவு, சுயவிருப்பம் என்பவை பல்வேறுபட்ட காரணிகளின் செல்வாக்கு உட்பட்டவை என்பது உண்மை. ஆதைக் காரணம்காட்டி ஒருவர் ஒரு தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு அவசியமான தகவல்களைத் திட்டமிட்டு மறைப்பதன்மூலம், அல்லது பொய்யான தகவல்களைக் கூறுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தெரிவினை மேற்கொள்ளும் நிலைக்கு ஒருவரைத் தள்ளுவது தெரிவிற்குள்ளோ சுயவிருப்பத்திற்குள்ளோ அடங்காது. அதேவேளை இத்தகைய திரிவுபடுத்தல்கள் சமூகத்தில் நிலவும் அசமத்துவங்களுக்கும் தெரிவு மற்றும் சுயவிருப்பத்தின்மீது செல்வாக்குச்செலுத்தும் ஏனைய காரணிகளுக்கும் (இனம்,மதம்,சமூகம்,பொருளாதாரநிலை போன்றபல) மேலதிகமாக பெண்களைப் பாலியல்ரீதியாகச் சுரண்டுவதற்கான உத்தியாக மாறியுள்ளதனை கவனத்திற்கொள்ளத் தயக்கம் ஏன்?

"சுயசிந்தனை, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களை வெறும் செயலற்றவர்களாக கருதி பாதிக்கப்பட்டவர்கள் என்ற பச்சத்தாப அணுகுமுறை பிரச்சனைக்குரியது"                   - ராகவன்

இவ்வாறு குறிப்பிடுவதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள்மீது சமூகத்திற்கு இயல்பிலேயே எழக்கூடிய  தோழமை உணர்வினை (Solidarity) கட்டுரையாளர் நீக்க முயற்சிக்கின்றார். அதேவேளை பாலியல் சுரண்டலில் ஈடுபட்டவர்கள்மீது அனுதாபத்தினை உருவாக்கும் முயற்சிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ‘அவர் தற்கொலைசெய்து கொண்டால் என்ன செய்வது’ என்பதுபோன்ற உணர்வுரீதியிலான மிரட்டல்கள். 

பாலியல் சுரண்டலிலீடுபட்டவர்கள் மீதான அனுதாபத்தினை ஏற்படுத்தல், உணர்வுரீதியான மிரட்டல்கள், பாதிக்கப்பட்டவர்கள் மீதான அவதூறுகளையும், திரிவுபடுத்தப்பட்ட தகவல்களையும் பரப்புதல், பாதிக்கப்பட்டவர்களை குற்றஞ்சாட்டுகின்ற கட்டுரைகளை எழுதுதல், பாலியல் சுரண்டல் தொடர்பான நடத்தைகளை ஒழுக்கமீறலாக சாதாரணமயப்படுத்தல் அல்லது அத்தகைய நடத்தைகளை நியாயப்படுத்தல், Me too செயன்முறையின் போதாமைகளை எடுத்துக்காட்டுவதனூடாக பாதிக்கப்பட்டவர்களை வாயடைக்க முயற்சித்தல், பாதிக்கப்பட்டவர்களின் செயலாளுமை பற்றிய (Agency) ஒருமுகப்பட்ட சிந்தனையினை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் முன்வைப்பதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வெளிப்பாடுகளில் Agency இல்லாதவர்களாக கருதப்படுகின்றார்கள் என்பதான கருத்தினை முன்வைத்து இவ்வெளிப்பாடுகளை நீர்த்துப்போகச்செய்ய முயற்சித்தல்  போன்றவையே பாலியல் சுரண்டல்கள் தொடர்பான வெளிப்பாடுகளை எதிர்கொள்ளும் தந்திரோபாயமாக இருப்பதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பாலியல் சுரண்டல் போன்ற அநீதிகளை வெளிப்படுத்துகையில் பெண்களது Agency இவ்வாறாகத்தான் இருக்கவேண்டும் என வரையறை செய்வதே ஆணாதிக்க மனநிலையின் ஒரு வெளிப்பாடாகும். பெண்களின் செயலாளுமை தொடர்பான இத்தகைய எதிர்பார்ப்புக்களும் பரிந்துரைகளும் அரைவேக்காட்டுத்தனமாக இருப்பதோடு ‘ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது’ என்ற பழமொழியை நினைவுபடுத்தகிறது.

" பொது வெளிக்கு வரும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்கள், ஆண்களுடன் சேர்ந்து பணிபுரியும் சந்தர்ப்பங்கள் உருவாகும் போது ஓரு ஆணின் மேல் பெண்ணுக்கு பாலியல் ஈர்ப்பு அல்லது காதல் வருவது இயல்பானதே.   திருமணம் செய்த ஆண், பெண் என்ற நெறி முறையை மீறும் நிகழ்வுகளும் நடப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். இங்கு பாலியல் பொறாமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் நிகழும். உதாரணமாக ஒருவர் இன்னொருவருடன் பாலியல் /காதல் தொடர்புகளை வைத்திருந்துவிட்டு, அதே சமயம் இன்னொருவரின் மேல் மையல் கொள்ளும் போது அல்லது தொடர்புகளை துண்டிக்கும் போது துண்டிக்கப்பட்டவர் உளரீதியான துன்பத்துக்கு ஆளாவது நிகழும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பல பிரச்சனைகள் உருவாகும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுதல், ஆத்திரப்படல் என்பவை இயல்பாக எழும். இந்த உள ரீதியான தாக்கத்திற்கு ஒரு காரணம் பாலியல் பொறாமை எனலாம். மற்றது சில எதிர்பார்ப்புகளுடன் ஒரு உறவை மேற்கொள்ளும் போது அந்த எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும் போது ஏற்படும் உள ரீதியான பாதிப்புகள். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் என்பது ஒன்றாக வாழ்தல் என்ற கருத்தியல் பின்னணியில் எழும் போது தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன"                                                          - ராகவன்

பாலியல் சுரண்டலை வெளிப்படுத்துவது என்பது பாலியல் பொறாமையினைக் கொண்டிருப்பதற்கான அடிப்படையாக மாறியது எப்போது? இக்கட்டுரையாளர் பாலியல் பொறாமை என்பதை எவ்வாறு வரையறுக்கின்றார்? பாலியல் பொறாமையினைக் கொண்டிருப்பதனை எதனடிப்படையில் தீர்மானிக்கின்றார்? பாலியல் சுரண்டல் தொடர்பான வெளிப்பாடுகளை முறையாக எதிர்கொள்ளத்திராணியற்று பாலியல் பொறாமை எனும் வெற்றுச்சொற்களின் பின் மறைந்துகொள்ளும் முயற்சியாக மட்டுமே இதனைப் பார்க்க முடிகின்றது. ஆக, உறவு முறியும்போது, திருமணத்திற்குப் புறம்பான உறவிலீடுபடும்போது ஏற்படும் பாலியல் பொறாமையின் காரணமாக இவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது கயமையும் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றஞ்சாட்டுவதும் அல்லாமல் வேறேதுமல்ல. 

பாலியல் சுரண்டல் தொடர்பான வெளிப்பாடுகள் மிகவும் அரிதாகவே மேற்கொள்ளப்படும். திருமணக் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல்கள் உட்பட அனைத்து வகையான சுரண்டல்களும்கூட குடும்ப கௌரவம், ஆணாதிக்க சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் போன்ற காரணங்களுக்காகவும், வேறுபல காரணங்களுக்காகவும் வெளிப்படுத்தப்படுவது மிகவும் அரிது. அவ்வாறிருக்க இத்தடைகளையும் எதிர்கொண்டு ஒரு பெண் தனக்கேற்பட்ட அநீதி தொடர்பில் பேசத் துணிந்தால், பாலியல் பொறாமை எனக்கூறுவது போன்ற அயோக்கியத்தனம் வேறில்லை. அதுதவிர கட்டுரையாளர், பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம் தொடர்பான எவ்வித பிரக்ஞையுமில்லாது, அவற்றினை அறிந்துகொள்வதற்கான குறைந்தபட்ச முயற்சியைத்தன்னும் மேற்கொள்ளாது இத்தகைய தீர்ப்பிடலினை எந்த அடிப்படையில் மேற்கொள்ளத்துணிகின்றார்? அப்படி இருக்கலாம் போல, இப்படி இருக்கலாம் போல என்பதான கதைகளைக் காற்றில் பறக்கவிடுவதும், சதிக்கோட்பாடுகளை (Conspiracy theories) உருவாக்கிக் கட்டுரை எனும்பெயரில் வெளியிடுவதும்தான் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளா?

" இன்னொரு புறம் பெண்ணியவாதிகளை விட பெண்ணியவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் சில ஆண்கள் பாலியல் குற்றவாளி, பாலியல் சுரண்டல்காரன் என்ற பதாகைகளை தூக்கிக்கொண்டு, பெண்களின் பாதுகாவலர்களாகவும், நியாயம் கேட்பவர்களாகவும் தம்மை முன்னிறுத்துகின்றனர்"                                           - ராகவன்

பெண்ணிலைவாதி எனும்சொல் பற்றிய புரிதலின்போதாமையே இத்தகைய கருத்தினை வெளிப்படுத்துவதற்குக் காரணமாயிருக்கின்றது. ஆண்கள் பெண்ணிலைவாதிகளாக இருக்கமுடியும், ஆண்கள் பாலியல் சுரண்டல் உள்ளடங்கலாக பெண்களுக்கெதிராக அநீதிகள் இழைக்கப்படுகையில் அதனை வெளிப்படுத்துவதற்கும், கேள்விகேட்பதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுடன் Solidarityஇனை வெளிப்படுத்துவதற்கும் முடியும். ஆனால் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடும் ஆண்களை கட்டுரையாளர் எதிர்மறையானமுறையில் பெண்ணிலைவாதிகளாக வரையறுக்கின்றார். அதன்மூலம் பெண்ணிலைவாதிகள் தொடர்பாகவும்  ஒரு எதிர்மறையான பிம்பத்தினை உருவாக்க முயல்கின்றார். பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் தொடர்பில் செயற்படவிரும்பும் ஆண்களை முத்திரை குத்துகின்றார்.  

ஆண்கள் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதென்பது பாலியல் பொறாமையினைக் கொண்டிருப்பதற்கான அடிப்படையாகுமா? அப்படியானால் பாலியல் சுரண்டல்வாதிகளைக் காப்பாற்ற முயல்பவர்களும் தம்மளவில் சுரண்டல்வாதிகளாக இருக்கின்றார்கள் என வாதிடமுடியுமல்லவா? ஒழுக்கவாதத்தின்மூலம் கட்டுரையாளர் தன்னை முற்போக்கானவராகக் காட்டிக்கொள்ளப்பார்க்கின்றார் எனக்கூறமுடியுமல்லவா? அதுதவிர பெண்களின் பாலியல் சுதந்திரம், விடுதலை போன்றவைகுறித்து பாலியல் சுரண்டலிலீடுபட்ட ஆண்கள் பேசும்போதும், அறிக்கைகள் வெளியிட்டபோதும் கட்டுரையாளர் அவர்களைப் பெண்ணிலைவாதிகளாக விளிக்கவில்லையே! ஆகவே கட்டுரையாளரின் இத்தகைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் ஒரு வலுவான கருத்தியல் அடிப்படைகள் ஏதேனும் இருக்கின்றனவா? இக்கட்டுரையினை கருத்தியல் கட்டுக்கதையாக அல்லாது வேறு எவ்வாறு அணுகுவது?


"ஒரு சில ஆண்கள் பாலியல் உறவை மேற்கொண்டு அப்பெண்களுக்கு சில நம்பிக்கைகளை ஏற்படுத்தி பணம் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்கள். இதனை பாலியல் சுரண்டல் என சொல்லமுடியும். ஆனால் அனைத்தையும் பாலியல் சுரண்டல் என்ற பதத்துள் அடக்குதல் கேள்வியாக எழுகிறது"                                                                     - ராகவன்

ஒரு சில ஆண்கள் பாலியல் உறவை மேற்கொண்டு அப்பெண்களுக்கு சில நம்பிக்கைகளை ஏற்படுத்தி பணம்வாங்கி ஏமாற்றியிருக்கின்றார்கள். இதனை பாலியல் சுரண்டல் என சொல்லமுடியுமென்பது பாலியல் சுரண்டல் தொடர்பிலான அறிவிலும் புரிதலிலும் இருக்கக்கூடிய போதாமைகளையே காட்டுகின்றது. பணத்துடன் பாலியல் உறவு தொடர்புபடுவது மட்டுமே பாலியல் சுரண்டலாகாது என்பதை மேலுள்ள வரைவிலக்கணங்களைப் பார்க்கும் எவருக்கும் புரிந்துவிடும். அனைத்தையும் பாலியல் சுரண்டல் எனும் பதத்திற்குள் அடக்குதல் கேள்வியாக எழுகின்றதெனக்கூறும் கட்டுரையாளர் அனைத்தையும் என குறிப்பிடுவது எவற்றை? ஒருவேளை அனைத்தையும் என குறிப்பிடப்படுபவை எவை எனப்பட்டியலிட்டால் அவை பாலியல் சுரண்டலா இல்லையா என வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் இல்லையா?

"ஒரு முதலாளித்துவ சட்ட அமைப்பில் கூட சுயவிருப்பின் அடிப்படையில் இருவர் பாலியல் உறவு கொண்டால் அவர்களில் ஒருவரை குற்றவாளியாக காண்பதில்லை"      - ராகவன்

இது மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட, அபத்தமான கருத்தாகும். சிறுவர்களுடனும், மனநிலை   பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது சுயவிருப்பத்துடன் பாலுறவு கொள்ளுதல் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விடயமா? அல்லது சுயவிருப்பென்பதை வளர்ந்தோருடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்வதாலேயே கட்டுரையாளர் இத்தகையதோர் கருத்தினைக்கூறுகின்றாரா? திரிவுபடுத்தப்பட்ட தகவல்களைக்கூறுவதன்மூலம் நம்பிக்கையினை ஏற்படுத்தி பெறப்படும் சம்மதத்தினை முதலாளித்துவ சட்டக்கட்டமைப்பினைக்கொண்டு பாவநீக்கம்செய்யும் முனைப்பு எதற்கானது?  

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உண்மையிலேயே பால்நிலை சமத்துவம்தொடர்பான பிரக்ஞையும், விருப்பும் கட்டுரையாளருக்கு சிறிதளவேனும் இருக்குமாயின் இனிவரும் காலங்களில் இத்தகைய அபத்தமான, பெண்களுக்கு விரோதமான கட்டுரைகளை தகவல் மற்றும் தரவுப்பிழைகளுடன் எழுதுவதைத்தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

நன்றி: அபத்தம்

[இக்கட்டுரையாளர் சிவா மாலதி மூதூரில் பிறந்தவர். 2005 சுனாமியில் தப்பிப் பிழைத்தவர். இவரது மூத்த சகோதரி இச் சுனாமியில் இறந்தவர். Madrass Christian College ல் புலமைப் பரிசில் பெற்று விஞ்ஞான மாணிப்பட்டமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர். இலக்கியத்திலும் சமூக விஞ்ஞானங்களிலும் மிக்க ஈடுபாடுள்ளவர். தற்போது அரசுசாரா நிறுவனமொன்றில்(NGO) பணிபுரிந்து வருகிறார்]

பின்னிணைப்பு

ராகவனின் கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள் சில




1. " A robust challenge to Ragavan, Siva Malathy!  Good! When I read his piece I felt that it was not very coherent at all.  I wasnt sure what he was getting at, really.   I dont think it was his intention to label women's demand for justice as something arising out of a 'moral panic'. But it seems to have turned out that way.   He seems to have written this piece affected by the several little storms set off during Ilakkiya Santhippu   and without the benefit of knowing all the facts surrounding this issue, and without proper reflection.  Not good at all" 
      - நிர்மலா ராஜசிங்கம் 

2. " இவ்வாறு மடைமாற்றம் செய்யப்பட்ட எழுத்துகள்தான் பாலியல் சுரண்டல் கார்கள்மீது ஒரு மென்மையான பார்வையை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமன்றி பாதிக்கப்பட்ட பெண்கள் மீதும், இதை வெளிக்கொண்டுவரும் பெண்கள் மீதும் ஒரு நம்பிக்கையின்மையையும், மன அழுத்தத்தையும் உருவாக்கியுள்ளது.  மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய எந்த குற்றவுணர்வும் இன்றி பாலியல் சுரண்டல்வாதிகளுடன் கைகோர்க்கும் மனநிலைக்கான உந்துசக்தியாக இவ்வெழுத்துகள் இருக்கின்றன. ஆகவே இது ஆண்மையவாத சிந்தனையன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்"
         - Vigi Nalliah

3. " மிகப்பெரிய  நீண்ட நெடிய  ஆய்வை   செய்திருக்கின்றீர்கள் ராகவன்.  வாழ்த்துகள்.  உற்ற நண்பர்களை  காப்பாற்றுவதாக  எண்ணி  இந்த ஆய்வை  புடலங்காய்  முருக்கங்காய்  ஆய்வின்  ஒரு பகுதியாக  செய்திருக்கின்றீகள்  . பெண்கள், சிறுமிகள் சிறுவர்கள்   மீதான  பாலியல் வன்முறையை  எப்படி இயல்பாக  கையாளுவது , என்பதில் இருந்து   மொத்தமாக  பாலியல்  வன்முறையை  எப்படி இயல்பாக்கம் ஆக்குவது ,  அதை அடைவது,    அணுகுவது என்பதை  தங்கள் ஆய்வு முன்வைத்திருக்கின்றது. மிக ஏமாற்றமான  ஆய்வு  ராகவன் . தொடர்ந்து உரையாடுவோம்"
   - அன்னம் சிந்து ஜீவமுரளி

தொடர்பான கட்டுரைகள்





Comments

Popular posts from this blog

யார் இந்த யதார்த்தன்

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

💥கள நிலவரம்💣 ஈழப்போரின் இறுதிக்காட்சிகள்