வாடிவாசல், அசுரன், Funny Boy: கலையும் வணிகமும்

  


கலைகளின் ஊடக எல்லைகளும் மொழியின் இரும்புத்திரையும்By நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது தற்காலத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டிங் மோசடி. நாடக ஊடகம் வேறு; நாவல் ஊடகம் வேறு; திரைப்பட ஊடகம் வேறு. உலகின் மகத்தான திரைப்படங்களில் Godfather முதலிய  மிகச்சிலவே நாவலை அடிப்படையாகக் கொண்டு வந்ததாயினும் சிறந்த  திரைப்படங்களாயின. Mario Puzoவின் நாவல் மோசமான நாவல் இல்லை என்றாலும் அது ஒரு நாவலாக பெரிதும் சோபிக்கவில்லை. அமெரிக்காவின் மிகச்சிறந்த பத்து நாவல்களுக்குள் Godfather நாவல் வராது. ஆனால் அமெரிக்காவின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலில் எப்போதும் Francis Coppolaவின் இயக்கத்தில் வெளியான Godfather படம் இருக்கும்.அடிப்படையில் எல்லாமே புனைவுகளாயினும் stagecraft, நாவல் பிரதி  screen script ஊடகங்கங்களாகப் பாரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கலை ஊடக எல்லைகளை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமானது  ஈசாப்பின் ’கொக்கும் நரியும்’ கதைதான். தட்டைக் கோப்பையிலுள்ள சூப்பை எப்படி ஒரு கொக்கால் நக்கிக் குடிக்கமுடியாதோ அப்படியே நீள் சாடியிலுள்ள சூப்பை ஒரு நரியால் குடிக்கமுடியாது.

பூமணியின் ‘வெக்கை’ என்ற தரமான நாவலை வெற்றிமாறன் ’அசுரனா’க்கி   எப்படி சீரழித்தார் என்று விவாதித்தோமா? இனி  சி.சு. செல்லப்பாவின்  வாடிவாசலை எப்படி சீரழிப்பார்  என்று எதிர்வு கூறுகிறோமா?  இல்லவே இல்லை. ஆனால் Funny Boy என்கிற மிகச்சாதாரணமான மொக்கையான  நாவலைச் சமூக ஊடகங்களிலும்  கனேடிய தமிழ் வானொலிகளிலும்  மணிக்கணக்காக விவாதிக்கிறோம்.  இந்த வணிகத் தந்திரத்திற்காகத்தானே  ‘தீபா மேத்தா’ இதனைத் தெரிந்தார்.

கலை ஒரு சந்தைக் கச்சாப்பொருளாகச் சீரழிந்த இக்காலத்தில் கலைக்கான விளம்பரமும் முன்னுக்கு வருகிறது. பிரபல்யமான/சர்ச்சைக்குரிய  ஒரு நாவலைப் படமாக்குகிறபோது இலவச விளம்பரம் ஏற்கெனவே இருக்கிறது. Trailerஐ விட நாவல் பிரதி ஆக ஏற்கெனவே கிடைக்கிற screen play செலவற்ற விளம்பரம். படத்தைப் பார்க்கப்போவதும் கலா ரசிகர்கள் அல்லவே, சனரஞ்சக மக்கள்தானே. மறுதரப்பில் ஒரு நாவல் படமாக்கப்படுவதால் அந்நாவலுக்கும் அதிக விளம்பரம் கிடைக்கிறது. இதனால்தான் பெரும்பாலான நாவலாசிரியர்கள் தங்கள் நாவல்களை எப்படியும் சிதைப்பதற்குத் திரைக்கலைஞருக்குப் பூரண சுதந்திரம் வழங்குகிறார்கள்.இந்த வணிக/சந்தை காரணங்களுக்காகத்தான் சில நாவல்கள் பல தடவைகள் பல இயக்குநர்களால்  படமாக்கப்படட்டுள்ளன. Bram Stoker இன் ’Dracula’ 62 தடவைகள்; விக்ரர் ஹியூகோவின் ’Les Miserables’ 50 தடவைகள்; சாள்ஸ் டிக்கன்ஸின் ’Christmas Carols’ 49 தடவைகள். Arthur Conan Doyle இன்  ’Sherlock Holmes’ 44 தடவைகள். சேக்ஸ்பியரின் ’ஹம்லெற்’ நாடகப்பிரதி 31 தடவைகள். ஜேன் ஒஸ்ரினின் ’Pride and Prejudice’ 28 தடவைகள். லூயிஸ் கரோலினது ’Alice’s Adventures In Wonderland’ 20 தடவைகள். ’The great Gatsby’ 6 தடவைகள்.

ஆதிச் சமூகங்களில் மட்டுமல்ல இன்றும்கூட ஒரு கலைஞரின் மிகப்பெரிய கௌரவம் அதை அனுபவித்த வாசகர் தரும் அனுபவப் பரவசமே. நாவல் என்கிற கலைவடிவம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. Personal. ’நாளை மற்றுமொரு நாளே’ நாவலின் பிரதான பாத்திரமான கந்தன் ஒவ்வொரு வாசகருக்கும் தனித்துவமான மனப்படிமத்தைக் கொடுத்திருக்கும். திரைப்படமாகும்போது கந்தன் எல்லா வாசகருக்கும் ஒருவரே. அதனால்தான் நான் என் மாணவர்களிடம் “செவ்வியல் நாவல்களை முதலில் படித்தபின் அவற்றை வைத்துச் செய்யும் திரைப்படங்களைப் பாருங்கள். ஒரு படமாக்கப்பட்ட செவ்வியல் நாவலின் திரை வடிவத்தைப் பார்த்தபின் அந்நாவலைப் படிப்பது அறுசுவை விருந்தை உண்டபின் மது அருந்துவதற்கு ஒப்பானது” என்று சொல்வேன்.

மகத்தான எழுத்தாளர்கள் இந்த மோசடியை அறிந்துதான்  தங்களுடைய Masterpiece களில் மோசடியான திரைக்கலைஞர்களைக் கைபோட அனுமதித்ததில்லை. 20ஆம் நூற்றாண்டின் மகத்தான நாவலாசிரியர் கப்ரியேல் கார்சியா மார்க்கியூஸைப்  பல திரைப்பட இயக்குநர்கள்  தொல்லை செய்திருக்கிறார்கள்.  அவன் தன் வாழ்நாளில் தன்னுடைய மகத்தான படைப்பான ’ஒரு நூற்றாண்டுகால தனிமை வாசத்தை’ எவரையும் படமாக்க அனுமதிக்கவில்லை. திரைப்படத்துக்குச் சரியாக வரும் என்று அவருடைய இரண்டாம் தரமான ’Chronicle of a Death Foretold’, ’Love in the Time of Cholera’ என்கிற நாவல்களை மட்டுமே அனுமதித்தார். மார்க்கியூசின் மரணத்தின் பின்னர்  அமெரிக்காவில் கல்விகற்ற அவரது இரண்டு மகன்மாரும் ஒரு நூற்றாண்டுகாலத் தனிமைவாசத்தை நெற்பிளிக்ஸ் படமாக்குவதற்கு அனுமதித்திருக்கிறார்கள். அதுவும் தங்களது தீவிரக் கண்காணிப்பில்.

 


கலை வடிவங்களுக்கிடையில் பாரிய வேறுபாடு இருப்பதுபோல ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இரும்புத்திரை இருக்கிறது. கொக்கும் நரியும் வேறுபாடுகள் இருக்கிறது.  உலகின் முதல் ஆதி நாவல்(நாவல் என்ற நவீன வடிவத்தில்) என்று தற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது Miguel Cervantes எழுதிய ’Don Quixote’ என்கிற கிஸ்பானிய நாவல். 1957 இல் மார்க்கியூசின் ஒரு நூற்றாண்டுகாலத் தனிமை வாசம் வந்த சில வருடங்களிலேயே அது Don Quixote க்கு பிறகு வந்த மகத்தான ஹிஸ்பானிய நாவல் என்று மிகச்சரியாகவே இனங்காணப்பட்டுக்  கொண்டாடப்பட்டது. Magical Realism என்கிற ஒரு style அதற்குக் கொடுக்கப்பட்டது. அந்த  Brand இல் எழுதப்பட்ட மகத்தான ஆங்கில நாவல் என்று ’Midnight’s children’ சந்தைப்படுத்தப்பட்டது. இங்கு சந்தைப்படுத்தல் வருகிறது. 16ம் நூற்றாண்டு பேரரசு கிஸ்பானிய பேரரசு. அந்த பேரரசு அழிந்த பிற்காலத்தில்தான் Don Quixote ன் மகத்துவம் மொழி பெயர்புபுக்களால் சுயாதீனமாக கண்டு கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆனால் சூரியன் மறையாத பேரரசு என்று கொண்டாடப்பட்ட பல பிரித்தானியரது மகத்தான நாவல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும் பிறப்பால் ஆங்கிலேயர்களால் எழுதப்படடவையல்ல. Google ல் தேடிப்பாருங்கள் “ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மகத்தான 100 நாவல்கள்” என்று. விடைகளில் அசல் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட மகத்தான நாவல்கள் மிகக்குறைவு. ஐரிஷ் காரராலும்(James Joyce/Seamus Heaney) அமெரிக்கராலும்(Saul Bellow- ஒரு யூதர்/ யூதராக வளர்க்கப்பட்டவர்)  ஜப்பானியராலும்(Kazuo Ishiguro), ரூஷ்யராலும்(Vladimir Nabokov) போலிஷ்காரராலும்(Joseph Conrad)  இந்தியராலும்(V.S.Naipaul, Salman Rushdie) ஈழத்தவராலும்(Michael Ondaatje) ஆபிரிக்கராலும்(Chinua Achebe/Wole Soyinka) இன்ன பிறராலும்  ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையே அதிகம். இது ஏன் என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

வாழ்நாள் பூராவும் நாவல்களையே படமாக்கி யாவாரம் செய்தவர் தீபா மேத்தா. 2012 இலேயே சல்மன் ரஷ்டியின்  ’Midnight’s Children’ ஐ விலைக்கு வாங்கிப் படமாக்கிவிட்டார். ரஷ்டியின் நாவலைப் படமாக்க ஏன் ஒரு ஆங்கில ஐரோப்பிய இயக்குநரும் 2012 வரை முயலவில்லை என்பதும் ஆராயப்படவேண்டியது.  உலகின் மகத்தான மாந்திரீக யதார்த்தவாத நாவல் மார்க்கியூசின் ஒரு நூற்றாண்டு கால தனிமைவாசம்தான். எனக்கு கிஸ்பானிய மொழி தெரியாது. மார்க்கியூசையும் ரஷ்டியையும் நான் படித்தது ஆங்கிலத்தில்தான். அசலான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ரஷ்டியின் நாவலை அதனுடைய அலங்கார மொழிநடை காரணமாக மிக்க சிரமப்பட்டே படித்தேன். அது கூறியதுகூறல் – Tautology. ஆங்கிலத்தில் வந்த மகத்தான Magical Realism என்று Midnight’s Children சந்தைப்படுத்தப்பட்டு விற்கப்பட்டது. Magical Realism ஆங்கிலத்தில் சரியாக வருமா என்று கவலைப்பட எவருமில்லை.  மார்க்கியூசின் ஆங்கில மொழிபெயர்ப்பு நாவலைப் படிக்கும்போது சிரமமே இருக்கவில்லை. அசல் ஆங்கிலத்தில் எழுதியதைப் போலிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் உலகப் பேரரசாக  ஆங்கிலேயர் வந்ததால் அதுவரை அரச மொழியாக/சர்வதேச மொழியாக இருந்த பிரஞ்சு மொழியை ஆங்கிலம் இட்டு நிரப்புகிறது. புதிதாக சர்வதேச மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெறுகிறது.

மொழியின் இரும்புத்திரை வரலாற்றில் ஆதிக்கம் பெற்ற மொழிகளுக்கு வாய்ப்பாகிறது. ஆங்கிலம் சர்வதேச மொழியாகுவதற்கு முன்பு ஐரோப்பிய அரச வம்சத்தினரின் மொழியாக De Facto  ’சர்வதேச மொழியாக’ Lingua Franca ஆக  இருந்தது பிரெஞ்சு மொழி.  17ஆம் நூற்றாண்டிலிருந்து  முதலாம் உலகப்போர் முடிவு வரை இருந்த ஆதிக்க மொழி.  அக்கால வல்லரசுகளின் ராஜதந்திர மொழி.

முதலாம் உலகப்போர் முடிவிலிருந்து 2ஆம் உலகப்போர் முடிவுவரை ஆங்கிலம் கோலோச்சியதால் தரத்தில் குறைந்த பல ஆங்கில  எழுத்தாளர்களின் படைப்புக்களும்  உன்னதமான உலக இலக்கிய வரிசையில் இடம்பிடித்தன. இந்நிலமை காலனியாதிக்கத்தின் முடிவில் 1950 களின் பின் மாறியது. இக்காலச் சர்வதேச மொழியான ஆங்கிலத்தை உலகின் பல நாடுகள் தங்கள் கல்வி மொழியாகவும் கொண்டன. பிலிப்பைன்ஸ், பிஜி, சிங்கப்பூர், இந்தியா, பல ஆபிரிக்க நாடுகளில் ஆங்கிலமே கல்வி மொழி.

ஆங்கிலமொழி ஆதிக்கத்தை இலக்கியத்தில் உடைத்தது மொழிபெயர்ப்புத் துறை. 1950 களுக்குப் பிறகு உலக இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் பொற்காலம். மொழிகளின் இரும்புத்திரையையும் இலக்கியத்தின் இரும்புத் திரையையும் முடியுமானவரை  உடைத்தது இந்த மொழிபெயர்ப்புக்கள் தாம். ஆங்கிலப் பேரரசு உச்சத்திலிருந்த 1930இல் D.H. Lawrence இறந்தார். அப்போது பிரசித்தமான ஆங்கிலப்பத்திரிகை The Guardian அவரை ரோல்ஸ்றோய்க்கு நிகரானவர் என்று எழுதியது. எவ்வளவு பெரிய அபத்தம். இன்று  அமெரிக்க ஆங்கில இலக்கியப் பள்ளிகளே லோரன்சின் நாவல்களைத் தமது பாடப் புத்தகங்களிலிருந்து விலக்கிவிட்டன. 

04.03.1930 The Guardian இல் வந்த     D.H.Lawrence க்கான அஞ்சலிதற்போது தரமான இலக்கிய வாசகர்களுக்குத் தெரிவுகள் அதிகம். ருசிய , ஹிஸ்பானிய, போர்த்துகேசிய இத்தாலிய, பிரெஞ்சு,  செக், சீனம், தென்னாசிய மொழிகளில் வரும் வந்த நல்ல படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்களைப் படித்து அனுபவிக்கலாம்.  இலக்கியமும் கலைகளும் சர்வதேசியமானவை. இலக்கியத்துக்கு இருக்கிற மொழியின் இரும்புத்திரை ஓவியத்துக்கும் இசைக்கும் இல்லை. தற்காலச் சர்வதேச மொழியான ஆங்கில Sub Titles களோடு திரைப்படங்கள் வருவதால் சினிமாவுக்கும் இப்போது இரும்புத்திரை குறைவு. ஆங்கில மொக்கை இலக்கியங்களைப் படிக்கும் நெருக்கடி  இப்போது உலக கலா ரசிகர்களுக்கு இல்லை.

ஆனால் இலக்கியத்தையும் சினிமாவையும் அனுபவிப்பவர்களில் பாதிப்பேர் கலா ரசிகர்கள் அல்லர். எக்காலத்திலும் இலக்கியத்தையும் சினிமாவையும் வித்தை பார்க்கும் மனோநிலையில் அணுகும் மாக்கள் இருப்பார்கள். இந்த வித்தை பார்க்கும் மாக்களுக்கு விற்பதற்கு தீபா மேத்தா என்கிற ’யாவாரி’ தெரிவு செய்த கச்சாப் பொருள்தான் Funny Boy நாவல். தீபா மேத்தாவுக்கு இந்தச் சமூக ஊடக காலத்தில் ஈழத்து இனப்பிரச்சனையும் ஒருபால் காதலும் கலந்த கொக்ரெயில் நன்கு விலைப்படும் என்பது தெரியும். ஏனெனில்

1. ஆங்கிலம் தெரிந்த ஒரு மில்லியன் ஈழத்தமிழ் Diaspora இப்போது இருக்கிறார்கள்.

2. தற்காலச் சமூக ஊடகக் காலத்தில் ஒருபாற் காதல் நன்றாக விலைப்படும்.

தீபா மேத்தா ஒரு அசல் திரைக்கலைஞராக இருந்திருந்தால் ஈழப்பிரச்சனை பற்றிய ஒரு நல்ல  நாவலை திரைப்படமாக்கவேண்டுமென்று விரும்பியிருந்தால் ஒரு சிங்களவர் ஆங்கிலத்தில் எழுதிய நாவலைக்கூடத்  திரைப்பிரதியாக்கி இருக்கலாம். Romesh Gunasekara வின் ஆங்கில நாவலான ‘Reef’ ஒரு நல்ல திரைப் பிரதியாகி இருக்கக்கூடியது.  தீபா மேத்தாவுக்கு இங்கு பிரச்சனை என்னவென்றால் சிங்கள Diaspora தமிழ் Diaspora வை விட மிகக்குறைவு. (ஒரு மில்லியன் ஈழத் தமிழ் Diasporaவை விட ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிங்கை மலேசியாவிலும் உள்ள தமிழ்நாட்டுத் தமிழ் Diasporaவும் சந்தைக்குள் வருகிறார்கள்) ஆக சந்தை இல்லை.தமிழரான அம்பலவாணர் சிவானந்தனின் ’When Memory Dies’ தமிழ் பறங்கியர்  மைக்கல் ஒண்டாச்சியின் ’Anil’s Ghost’ என்பன நாவலாகச் சோபிக்கவில்லை. ஆனால் அற்புதமான திரைப்படங்களாகக் கூடியன.  இவற்றைவிட மொழியின் இரும்புத் திரையால் மகத்தான சமகாலச் சிங்கள நாவல்கள் சர்வதேசத்தை எட்டுவதில்லை. சமகால ஈழத் தமிழிலக்கியத்தைவிட மிகச் செழுமையானது சிங்கள இலக்கியம். பல மகத்தான ஒருபால் காதல் கதைகள் சிங்களத்தில் வந்திருக்கின்றன.சர்வதேச மொழியான ஆங்கிலத்தின் வல்லாதிக்கத்தால் அம்மொழியில் எழுதப்படும் பல மிகச்சாதாரணமான நாவல்களே உலகில் அதிகம்பேரால்  படிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் வழங்கப்படும் மிகப்பிரபல்யமான விருதான Man Booker விருது இலக்கியத்தின் சாபம். புக்கர் பரிசு பெறும் நாவலை வெளியிட்ட பதிப்பாளருக்குக் கிடைப்பது  ஜாக்பொட் அதிஸ்டம். புக்கர் பரிசுத் தெரிவும் மிக்க சர்ச்சைக்குரியது. நன்றாக விலைப்படக்கூடிய பல சுமாரான நாவல்களுக்கே பெருமளவு இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தரமான உலக இலக்கியங்களைப் படிக்கக்கூடிய தேர்ந்த வாசகர்களைப் புக்கர் பரிசுபெற்ற பெரும்பாலான நாவல்கள் கவருவதேயில்லை. 

நாவல்களை அடியொற்றிவந்த பல திரைப்படங்களைப் பார்த்த ஏமாற்றத்தில் நான் இப்போது அப்படியாக வரும் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை என்பதைக் கொள்கையாக வரித்துக்கொண்டிருக்கிறேன். The English Patient (மைக்கல் ஒண்டாச்சி), Atonement( Ian Mcewan) அசுரன் (பூமணியின் ’வெக்கை’), மோகமுள் (தி. ஜானகிராமன்) முதலிய திரைப்படங்கள் தந்த ஏமாற்றம் எனக்குக் காணும். Funny Boy நாவலை அது வந்தபோதே படித்திருந்தேன். Funny Boy திரைப்படத்தை நான் பார்க்கப்போவதில்லை.

தொடர்பான கட்டுரைகள்

1. சோபாசக்தியின் பொக்ஸ்: ஒரு மலின இலக்கியம்

2. சர்மிளா செயித்தின் கபட நாடகம்

3. சுய தணிக்கையும் சுய மைதுனமும்

4. ஜெயமோகன் முத்துலிங்கம் ஆகியோரின் இலக்கிய ஊழல்கள்


Comments

Popular posts from this blog

பிரபாகரனின் இறுதி 3 நாட்கள்

 யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், விரிவுரையாளர்களின்   கல்வி அறிவு மோசடிகள்

யார் இந்த யதார்த்தன்